ஊட்டி, மே 16: ஊட்டியில், மலர் கண்காட்சியை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. பார்க்கிங் தொல்லைகளை களைய புறநகர் பகுதிகளில் உள்ள காட்டேஜ்களில் சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். கோடை காலங்களில் குளு குளு சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்தே காணப்படுகிறது. இருந்த போதிலும், சாதாரண நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள், கூடலூர் செல்லும் சாலைகளில், சுற்றுலா பயணிகளை நம்பியே பலரும் கடைகளை விரித்துள்ளனர். இவர்கள், தங்களது வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கீரை வகைகள் உட்பட பல்வேறு காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த காய்கறிகளை கண்டவுடன் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி வாங்கிச் செல்வது வழக்கம்.
சிலர் ஊட்டி மார்க்கெட்டிற்கு மற்றும் உழவர் சந்தைக்கு சென்று பச்சை காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், தற்போது நகருக்குள் வாகனங்கள் செல்ல கெடுபிடி அதிகமாக உள்ளது. மேலும், வாகனங்களை எடுத்து வந்தாலும், அதனை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதகிகள் இல்லை. இதனால், சாலையோர கடைகளில் வாகனங்களை நிறுத்திக் கொண்டு, காய்கறிகளை வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு சென்று விடுகின்றனர். சுற்றுலா பயணிகள், விவசாயிகளிடம் பேரம் கூட பேசுவதில்லை. இதனால், சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
காய்கறிகள் மட்டுமின்றி, அனைத்து விதமான பொருட்களையும் சாலையோரம் மற்றும் நடைபாதை கடைக்காரர்களிடமே சுற்றுலா பயணிகள் அதிகம் வாங்குகின்றனர். மேலும், புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு உட்கொள்கின்றனர். அதேபோல, நகருக்குள் வராமல் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கிராமப்புறங்களில் உள்ள காட்டேஜ்களில் தங்குவதற்கே அதிகம் விரும்புகின்றனர். இதுபோன்று புறநகர் பகுதிக்கு பார்க்கிங் பிரச்னைகள் மற்றும் உணவு பிரச்னைகள் இருப்பதில்லை என்பதே தாங்கள் செல்வதற்கு காரணம் என சுற்றுலா பயணிகள் தரப்பில் தெரிவித்தனர்.
The post மலர் கண்காட்சியை முன்னிட்டு குவியும் கூட்டம்; ஊட்டி நகருக்குள் வாகனம் நிறுத்த இடமில்லை appeared first on Dinakaran.