மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடைபெறும்: இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்

5 hours ago 2

வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடத்தப்படும் என்றும், இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் கர்தினால்கள் அறிவித்துள்ளனர். கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) நேற்று முன்தினம் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நிமோனியா பாதிப்பு காரணமாக 5 வார சிகிச்சைக்குப் பின் வாடிகன் திரும்பியிருந்தார். சிறு இடைவெளிக்குப் பின் ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு திருப்பலியில் சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்ட போப், கடைசியாக மக்களுக்கு தனது ஆசிகளை வழங்கினார். அதற்கு அடுத்த நாளே அவர் வசித்து வந்த டோமஸ் சான்டா மார்டா ஓட்டல் அறையில் காலமானார்.

போப் மறைவைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கிற்கான பாரம்பரிய நடைமுறைகள் தொடங்கி உள்ளன. வழக்கமாக போப்கள் வசிக்கக் கூடிய அப்போஸ்தலிக் அரண்மனையும், பிரான்சிஸ் தங்கியிருந்த சாண்டா மார்ட்டா ஓட்டலும் சீல் வைக்கப்பட்டது. ஓட்டலில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிசின் உடல் சிவப்பு அங்கி போர்த்தப்பட்டு மரப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் முன்பாக வாடிகன் வெளியுறவு செயலாளர் பிரார்த்தனை செய்த வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக போப் பிரான்சிசின் உடல் வெளிஉலகிற்கு காட்டப்பட்டது.

போப்பின் இறுதிசடங்கு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கர்தினால்களின் முதல் கூட்டம் வாடிகன் சினோட் மண்டலத்தில் நேற்று காலை நடந்தது. இதில், போப் பிரான்சிசின் இறுதி சடங்கை வரும் 26ம் தேதி நடத்துவது என்றும், இன்று முதல் போப் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. போப் மறைவுக்குப் பிறகு கர்தினால்கள் கூடி எடுக்கும் முதல் முக்கிய முடிவு இது. இதைத் தொடர்ந்து போப் பிரான்சிசின் உடல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவலாயத்திற்கு இன்று கொண்டு வரப்படும். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

போப் பிரான்சிஸ் விருப்பப்படி அவரது உடல் வாடிகனுக்கு வெளியே ரோம் நகரில் உள்ள செயின்ட் மேரி மேஜர் பசிலிக்கா தேவாலாயத்தில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) அடக்கம் செய்யப்படும். இறுதி சடங்கிற்குப் பிறகு 9 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படும். அப்போது கர்தினால்கள் ஒன்றுகூடி புதிய போப்பை தேர்வு செய்வார்கள். பொதுவாக புதிய போப் தேர்வு செய்ய 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். போப் மறைவைத் தொடர்ந்து பல உலக நாடுகளும் துக்கம் அனுசரித்து வருகின்றன. இந்தியாவில் 3 நாள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட பிரான்சிஸ் தனது 12 ஆண்டு கால பதவியில் எளிமையாக வாழ்ந்த அவர் வரும் 26ம் தேதியுடன் வாடிகனில் இருந்து விடை பெற உள்ளார்.

* சவப்பெட்டியிலும் எளிமை
போப் ஆக எந்த ஆடம்பரமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்த பிரான்சிஸ் தனது இறுதி சடங்கையும் எளிமையாக நடத்த வேண்டுமென விரும்பியவர். பொதுவாக போப்களின் உடல் சைப்ரஸ், ஈயம், ஓக் மரத்தால் ஆன 3 அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இந்த நூற்றாண்டு பாரம்பரியத்தை உடைத்த போப் பிரான்சிஸ் தனக்கான சவப்பெட்டி எளிமையானதாக இருக்க வலியுறுத்தினார். அதன்படி முதல் முறையாக துத்தநாகம் பூசப்பட்ட ஒற்றை அடுக்கு சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

* சவப்பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள்
போப் பிரான்சிசின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப் பெட்டி இறுதிசடங்கிற்கு முந்தைய நாள் இரவு மூடப்படும். அப்போது அவரது முகம் வெள்ளை திரையால் மறைக்கப்படும். அத்துடன், போப் பிரான்சிசின் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், ரோஜிட்டோ என்ற ஒற்றை பக்க ஆவணம் வைக்கப்பட்ட பையும் சவப்பெட்டியில் போடப்படும். ரோஜிட்டோ ஆவணத்தில் போப்பின் பிறப்பு, வளர்ப்பு, பிஷப் பணி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஒவ்வொரு போப்பின் சவப் பெட்டியிலும் கட்டாயம் ரோஜிட்டோ இடம்பிடிக்கும்.

* அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வருகை
போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ரோம் வருவதாக உறுதி செய்துள்ளனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், போப் பிரான்சிசின் தாய்நாடான அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா, ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் காரணமாக ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

The post மறைந்த போப் பிரான்சிசின் இறுதிசடங்கு வரும் 26ம் தேதி நடைபெறும்: இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் appeared first on Dinakaran.

Read Entire Article