சென்னை,
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் டாக்டரை தாக்கிய விக்னேசுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் , டாக்டர் பாலாஜியை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார் .
தொடர்ந்து மருத்துவர்களின் தர்ணா போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் . கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.