மருத்துவமனைக்கு நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு மலைக்கிராமத்தில் சாலை வசதியின்றி டோலி கட்டி சடலம் எடுத்து சென்றனர்

2 months ago 8

* வாணியம்பாடி அருகே வேதனை

* தார் சாலைக்கு மக்கள் கோரிக்கை

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(59), விவசாயி. இவரது மனைவி சின்னபாப்பா(50). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. கோவிந்தனுக்கு நேற்று முன்தின் மாலை திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதற்கு சிகிச்சை பெற நெக்னாமலை கிராமத்தில் இருந்து மலை அடிவாரத்திற்கு கரடுமுரடான மண்சாலையில் நடந்து சென்றார். பின்னர் மலையடிவாரத்தில் இருந்து உறவினர்களுடன் பைக்கில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனைக்கு சற்று தொலைவில் வந்தபோது, நெஞ்சுவலி அதிகமானது. இதனால் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கோவிந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கிருந்து உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம்‌ மலையடிவாரத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மலை கிராமத்திற்கு தகவல் தெரிவித்து கிராம மக்களின் உதவியோடு கோவிந்தன் உடலை நேற்று நள்ளிரவு ‌மலையடிவாரத்தில் இருந்து டோலி கட்டி தீப்பந்தத்தின் உதவியால் சுமார் 7 கிமீ தூரம் உள்ள நெக்னாமலை மலை கிராமத்திற்கு தூக்கிச்சென்றனர். சாலை வசதியில்லாத மலை கிராமத்தில் இருந்து நெஞ்சுவலிக்காக வந்த முதியவர் திடீரென இறந்துவிட்ட நிலையில், அவரது சடலம் டோலி கட்டி மீண்டும் மலைப்பகுதிக்கு தூக்கிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்ககளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதுகுறித்து கோரிக்கை வைத்தபோது மாவட்ட அதிகாரிகள், வனத்துறையினர் தார்சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்தார்கள். ஆனால் இதுவரை பணிகள் நடக்கவில்லை. எனவே மலைக்கிராம மக்களின் நலன் கருதி தார் சாலை அமைத்து தரவேண்டும். போக்குவரத்து வசதியும் செய்து தரவேண்டும்’ என்றனர்.

பல ஆண்டு அவலம்

நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு 167 குடும்பங்களை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் உள்பட தேவையான பொருட்கள் வாங்க மலையடிவாரத்தில் உள்ள ஆலங்காயம், வாணியம்பாடிக்கு வரவேண்டி உள்ளது. அதேபோல் பிரசவம், பாம்புகடி, விபத்து போன்ற அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மலைகிராமத்தில் இருந்து அடிவாரத்திற்கு 14 கி.மீ. தூரம் மண் சாலையில் நடந்தும், பைக்கிலும் செல்லவேண்டி உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்று சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது.

The post மருத்துவமனைக்கு நடந்து சென்றவர் மயங்கி விழுந்து சாவு மலைக்கிராமத்தில் சாலை வசதியின்றி டோலி கட்டி சடலம் எடுத்து சென்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article