சென்னை: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்த நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து கால நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா? என்பதை விசாரிக்க வேண்டும், என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாநகரின் திருச்சி சாலையில் இருந்த தனியார் மருத்துவமனையில் நேற்று (12) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட 7 பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மின் சாதனம் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.