'மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற தனி அமைப்பை உருவாக்க வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

6 hours ago 2

சென்னை,

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை, மருத்துவமனை வளாகத்திற்குள் விக்னேஷ் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜி, படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு காவல்துறையினர் மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரிப்பார்கள். ஆனால், காவல்துறைக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், அவர்களால் தொடர்ந்து மருத்துவமனைகளை கண்காணிக்க முடியாது. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு, மருத்துவமனை பாதுகாப்பு படை என்ற தனி அமைப்பை உருவாக்கி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தேவையான அளவில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article