கோவை,
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் மலைப்பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கார்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லை என்பதால் மேலே செல்வதற்கு பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 150 கார்களும், மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணிவரை 150 கார்களும் இ-பாஸ் முறையில் அனுமதிக்கலாமா என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் 4 சக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் எடுக்க வேண்டும் என்கிற தகவல் வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவது குறித்து பக்தர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டு இ-பாஸ் வாங்க வேண்டும் என்று கருத தேவையில்லை. வழக்கம்போல் வாகனங்களில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரலாம் என்று கூறினார்.