மும்பை : கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை அடுத்து மராட்டிய அரசு தனது மதிய உணவு திட்டத்தில் மீண்டும் முட்டையை இணைத்துள்ளது. பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம், தற்போது நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 50,000 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை முட்டை வழங்கும் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு மராட்டிய அரசு, அறிமுகம் செய்தது.
ஆனால் குறிப்பிட்ட சில அமைப்புகளின் போராட்டத்தால், 2025 ஜனவரி 28ம் தேதி மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. மதிய உணவில் முட்டையை நிறுத்துவதால், புரதச்சத்து கிடைக்காமல் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் எனக்கூறி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுப்பெற்றதை அடுத்து, புதிய கல்வி ஆண்டு முதல் மதிய உணவு திட்டத்தில் முட்டை மற்றும் வாழைப்பழத்தை மராட்டிய அரசு சேர்த்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தாதாஜி அறிவித்துள்ளார்.
The post மராட்டியத்தில் மதிய உணவு திட்டத்தில் மீண்டும் முட்டை சேர்ப்பு : கடும் எதிர்ப்பை அடுத்து பணிந்தது பாஜக அரசு!! appeared first on Dinakaran.