மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மராட்டிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்து திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக காமராஜர் மற்றும் அம்பேத்கர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளியில் நேரு வேடம் அணிந்த குழந்தைகளின் பேச்சு போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.