
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மரணத்திற்குப் பின் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் கொண்டாட்டமாகும். 'ஈஸ்டர்' என்ற வார்த்தை 'ஆல்பா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'விடியல்' என்று பொருளாகும். இது ஜெர்மன் மொழியில் 'ஈஸ்டாரம்' என்றும், ஆங்கிலத்தில் 'ஈஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உயிர்த்தெழுதல்' என்பது பொருளாகும்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு 13-ம் நூற்றாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, உயிர்த்தெழுதலின் அடையாளமாக முட்டை மாறியது. இயேசு கல்லறையில் இருந்து எழுந்தது போல், முட்டை ஓட்டில் இருந்து வெளிப்படும் குஞ்சு புதிய வாழ்க்கையை குறிக்கிறது.
ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தில், சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தின் அடையாளமாக முட்டைகளுக்கு சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. இந்த முட்டையினுள் வண்ண வண்ண சாக்லெட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் படி இருக்கும். ஈஸ்டர் என்பது, 'பாஸ் ஓவர்' நிகழ்வை நினைவுகூரும் பாஸ்கா பண்டிகைக்கு ஒப்பானதாகும். இது இஸ்ரவேலர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, எகிப்தை விட்டு புறப்படும் போது, கடவுள் எகிப்தில் இஸ்ரவேலர்களின் வீட்டு நிலைகளில் ரத்தம் பூசப்பட்ட வீடுகளை 'கடந்து சென்றதன்' நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதை யூதர்கள் இன்றளவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர்.
இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அப்பம், திராட்சை ரசத்தை சீடர்களுக்கு கொடுத்து நற்கருணை திருவிருந்து என்னும் உடன்படிக்கையை உருவாக்கிய கடைசி இரவு உணவு - பாஸ்காவின் முதல் நாளுக்கான பாரம்பரிய உணவாகும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்தி மரித்ததை நினைவுகூரும் நிகழ்வு தான் இப்போது ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் நற்கருணை, திருவிருந்து ஆகும்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் நித்திய வாழ்வு உண்டு என்பது தான். இன்றைக்கு ஒவ்வொருவரையும் வாட்டிக்கொண்டிருக்கும் பயங்கள் பலவிதம். அது மரணத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். அல்லது வியாதியால் மரணம் வந்துவிடுமோ என்ற அச்சமாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொருவரையும் பலவிதமான பயங்கள் ஆட்டிப் படைக்கின்றன.
அந்த பயத்தை நீக்குகிறவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் வேதாகமத்தில் 365 முறை 'பயப்படாதே' என்று கூறப்பட்டுள்ளது. தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விசுவாசிகளின் பயத்தை அவர் சந்தோஷமாக மாற்றுகிறார்.
"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்றார் (மத்.28:20).
இன்றைக்கு உலக வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதன் வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஒரு வாசல். நிலையற்ற வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள்ளாக கடந்து செல்லுகிற ஒரு வாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே அவர் நிரூபித்தார். மனிதனாய் பிறந்தார், மாம்சமும் ரத்தமும் உடையவராய் வாழ்ந்தார்.
மறுமை ஒன்று உண்டு, அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் இந்த உலகிற்கு காட்டியது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உன்னதமான நம்பிக்கையை தருகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போல நாமும் இம்மையில் மரித்தாலும், மறுமையில் நிச்சயமாக உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை தான் அது. ஆம் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பிறருக்கு அவர் செய்த அன்பான சேவையின் முன் மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நாம் அவருக்கு நன்றி செலுத்தி, உயிர்த்தெழுதல் நினைவை கொண்டாடி, தேவைப்படுவோருக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவோம்.