மயிலாடுதுறை: தென்னக ரயில்வே துறையின் சார்பில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.23 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த ரயில் நிலையமும் புதுமையாக புதுப்பிக்கப்பட்டு நடைபாதை அமைத்தல், அதில் டைல்ஸ் கற்கள் பதித்தல், நுழைவாயில் ஏற்படுத்துதல், 100 அடி கொடிமரம் அமைத்தல், இருசக்கர நான்கு, சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது அனைவரும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றாலும் நல்ல அளவில் தரமான முறையில் பணிகள் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும். பணிகள் துவங்கிய பொழுது அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல எம்பி சுதாவும் நேரில் ஆய்வு செய்து தரம் குறித்து தனது அதிருப்தி தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலைய முதலாம் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக மிகவும் மோசமானதாகவும் உடைந்தும் ஆங்காங்கே கிடப்பது பார்த்து பொதுமக்கள் பயணிகள் இப்பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அனைத்து நடைபாதைகளில் பதிக்கப்பட்டு வரும் கற்கள், டைல்ஸ்கள் தரம் மற்றும் கணம் ஆகியவற்றை ரயில்வே துறையினரால் கொடுக்கப்பட்ட அளவில் தான் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக ரயில்வே பொறியாளர்கள் கண்காணித்து ஒட்டப்பட வேண்டும். தற்பொழுது பல்வேறு இடங்களில் மழையினாலோ வேறு சில காரணங்களினாலோ, பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். மேலும் ரயிலை பிடிப்பதற்காக அவசரமாக வருகின்ற, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள், பெண்கள் உடைந்த கற்கள் தெரியாமல் கீழே விழுந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகின்றன. ஆகவே மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், ரயில் நிலைய நுழைவாயிலில் பொதுமக்களின் வசதிக்காக கட்டப்பட்டிருந்த கழிவறைகளும் இடித்து அகற்றப்பட உள்ளதால் அதற்கு நிகராக அருகிலேயே பொதுக்கழிவரையும் உடனடியாக அமைத்து தர வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் புதிதாக பதிக்கப்பட்ட டைல்ஸ் பெயர்ந்துள்ளதால் பயணிகள் அவதி: உடனே சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.