மயிலாடுதுறை, ஜன.26: மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேனீர் கப்புகள்/டம்ளர்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை பயன்படுத்துதல், தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இப்பேரணி தொடங்கி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் மாசில்லாத நிலையை உருவாக்கி தர அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
இப்பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். பேரணி மயிலாடுதுறை நகராட்சி அலுவலக வளாத்தில் தொடங்கி தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப்பள்ளிவரை சென்றடைந்தது. பேரணியில், நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மயிலாடுதுறை நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.