*கலெக்டர் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் குறைந்தபட்ச ஆதார விலை பச்சைபயறு கொள்முதல் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ காந்த் தொடங்கி வைத்தார்.விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பச்சைபயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பச்சை பயறு விளைபொருளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. தற்போது பச்சைபயறு விலை 1 கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பச்சை பயறு விலை ரூ.86.82 என கொள்முதல் செய்யப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டம் நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 378 மெ.டன் பச்சைபயறு கொள்முதல் செய்ய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி மூலம் பெறப்பட்ட சிட்டா.
அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கீழ்காணும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட விவசாயிகளை விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளை பொருளை எடுத்து வர குறிப்பிடும் நாளில் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள, பச்சை பயறு தரம் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு (சதவீத எடையளவு குவிண்டாலுக்கு) இதர பொருட்கள் கலப்பு 2%, சேதமடைந்தவை 3%, முதிர்வடையாத மற்றும் சுருங்கியவை 3%, வண்டுகள் தாக்கியவை 4%, ஈரப்பதம் 12% இருத்தல் வேண்டும். ஒரு ஹெக்டர் சாகுபடி பரப்பிற்கு 384 கிலோ பச்சைபயறு (155 கிலோ பச்சைபயறு ஒரு ஏக்கர் என்ற அளவில்) என்ற அளவில் கொள்முதல் செய்யப்படும்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான பச்சைபயறு கொள்முதல் 29.06.2025 வரை நடைபெறவுள்ளது. பச்சைபயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, பச்சைபயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பச்சை பயிறு கொள்முதல் பணியினை மயிலாடுதுறை, கூறைநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநர் சுப்பையன், மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மயிலாடுதுறை ஒழுங்கு விற்பனை கூடங்களில் 378 மெ.டன் பச்சைபயிறு கொள்முதல் செய்யும் பணி ஆரம்பம் appeared first on Dinakaran.