மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் சடலங்களை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

3 months ago 17

 

திருத்தணி, அக். 7: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மயானத்திற்கு சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதியின்றி 30 ஆண்டுகளாக பொதுமக்கள் சடலத்தை விவசாய நிலங்களின் வரப்பு மீது சுமந்து செல்லும் அவல நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட குமாரகுப்பம் அருந்ததி காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகிலேயே மயானம் உள்ளது.

இருப்பினும் சாலை வசதி இல்லாத நிலையில், விவசாய நிலங்களின் வரப்பு மீதே சடலங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்தார். மாலை அவரது சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஊர்வலமாக விவசாய நிலங்களின் வரப்பு மீது மயானத்திற்கு எடுத்துச் செல்ல கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து, கிராமமக்கள் கூறுகையில் 30 ஆண்டுகளாக எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள மயானத்திற்கு சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாத நிலையில் வரப்பு மற்றும் விவசாய நிலங்களில் எடுத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாய நிலங்களில் சடலம் எடுத்துச்செல்ல விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் பலமுறை வழங்கினோம்.

விவசாயிகள் ஒருசிலர் சாலை அமைக்க நிலம் தர முன் வருகின்றனர். இருப்பினும், அரசு உரிய முயற்சி எடுத்து நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதால், 30 ஆண்டுகளாக இறுதி ஊர்வலத்திற்கு சாலை வசதியின்றி அவதிப்படுவதாக அருந்ததி காலனி மக்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு சென்று வர சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் சடலங்களை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article