புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு அருகே தீக்குளித்த இளைஞர் நேற்று டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். உத்தர பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்த ஜிதேந்திரா (26) என்பவர் கடந்த 25ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அருகே பெட்ரோல் போன்ற பொருளை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, நாடாளுமன்றம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்கள் உதவியுடன் வேகமாக பரவிய தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் தீக்காயமடைந்த ஜிதேந்திரா, சிகிச்சைக்காக ஆர்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீக்காய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, பாக்பத்தில் உள்ள சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும், அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் உள்ள மற்றொரு குடும்பத்துடன் தாக்கப்பட்ட இரண்டு வழக்குகளை எதிர்கொண்டதால் அவர் கவலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட ஜிதேந்திரா 95 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.23 மணிக்கு காலமானார். ஜிதேந்திராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 95% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்றம் அருகே தீக்குளித்த இளைஞர் பலி appeared first on Dinakaran.