மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த மாஜி ராணுவ வீரருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிப்பு

3 days ago 2

திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (39), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கடமாதவி (35). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குருமூர்த்தி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கஞ்சன்பார்க் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் காவலராக பணியில் சேர்ந்தார். இதனால் ரங்காரெட்டி மாவட்டம் சில்லலகூடா பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த 16ம்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது அவரை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் உறுப்புகளை வெட்டி குக்கரில் வேகவைத்து பின்னர் காயவைத்து தூளாக்கி கால்வாய் மற்றும் ஏரியில் வீசினார். இச்சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து தெலங்கானா போலீஸ் கமிஷனர் சுதீர்பாபு நேற்றிரவு நிருபர்களிடம் கூறுகையில், ‘மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு மாயமானதாக குருமூர்த்தி, போலீசாரை நம்பவைத்தார். மேலும் விசாரணையின் கோணத்தை திசை திருப்பினார். இருப்பினும் அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் கண்காணித்து கையும் களவுமாக பிடித்தோம். கொலை செய்ததை ஒப்புக்கொண்டபோதும் உடல்பாகங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர்தான் உடல் பாகங்களை வேகவைத்து பின்னர் காயவைத்து பொடியாக்கி சின்ன சின்ன கவர்களில் வைத்து ஏரி அருகே குப்பை கிடங்கில் வீசியது தெரிந்தது.

`ப்ளூரே’ எனப்படும் டெக்னாலஜியை பயன்படுத்தி தடயங்களை சேகரித்தோம். அதன்பின்னரே இந்த கொடூரக்கொலை குறித்த தகவல் முழு அளவில் தெரிந்தது. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு மோசமான மிகக்கொடூர மிருக புத்தி இருப்பது இதன்மூலம் தெரிகிறது. கைதான குருமூர்த்திக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் அறிக்கை தயார் செய்துள்ளோம். இனி, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் தண்டனை பெற்றுத்தருவதில் தீவிரம் காட்டி வருகிறோம்’ என்றார்.

The post மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த மாஜி ராணுவ வீரருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article