ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மகன் சக்திவேல் (25). இவர் அதே ஊரை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பாப்பம்மா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் பாப்பம்மாவுக்கும், சக்திவேல் வீட்டினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு கணவருடன் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி சக்திவேல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடந்த 26ம் தேதி சக்திவேல் குடும்பத்தினர் பேரிகை போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அது சக்திவேல் என்பது தெரிய வந்தது. தகவலறிந்து பேரிகை போலீசார் சென்று, கடந்த 19ம் தேதி யாருடன் கடைசியாக சக்திவேல் சென்றார் என விசாரணை நடத்தினர்.
அதில், அவர் கடைசியாக மனைவியின் அண்ணன் வெங்கடேஷ் (32) மற்றும் உறவினர்கள் ராஜேந்திரன் (48), குமார் (22) ஆகியோர் சேர்ந்து மரம் வெட்ட அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசிடம் போலீசார் விசாரித்தபோது, வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் சக்திவேல் மீது குண்டு காயம் பட்டதாகவும், தாங்கள் தப்பி ஓடி வந்து விட்டதாகவும் கூறினர். ஆனாலும் கிடுக்கிபிடி விசாரணையில், வெங்கடேஷ் தனது தங்கையின் கணவரை கடத்திச்சென்று வனப்பகுதியில் வெட்டிக் கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்து நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசையும், ராஜேந்திரனையும் அந்தியூர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவரது மனைவி மங்கம்மா (25)வுடன் சக்திவேல் முறை தவறி உறவு வைத்துள்ளார். இதை கண்டித்தும் தொடர்பை விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அவரை மரம் வெட்ட ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
The post மனைவியுடன் தகாத உறவு; தங்கை கணவரை கடத்தி கொன்று எரித்த வாலிபர்: நண்பருடன் கைது appeared first on Dinakaran.