மனிதநேய வார நிறைவு விழா; மாணவர்கள் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெற வேண்டும்: அரியலூர் கலெக்டர் பேச்சு

4 hours ago 1

அரியலூர், ஜன.31: அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வெத்தியார்வெட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா நேற்று (30ம்தேதி) கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. மனித நேயம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் ஆண்டு தோறும் ஜனவரி 24 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை மனித நேய வார விழா ஆதி திராவிடர் நலத் துறை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி பேசியதாவது: பிறப்பால் அனைவரும் சமம். ஜாதி, மதம், இனம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடுகளும் இல்லாத சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் சமத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்தகைய விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சமத்துவமான சமுதாயம் அமைய வேண்டும் எனில் கல்வி கற்க வேண்டும். பொருளாதார சூழல்களால் கல்வி கற்பதில் எவ்வித தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசால் ஆதிதிராவிட நல பள்ளிகள், தங்கும் விடுதிகள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். இதற்கான சிந்தனை வளர்ச்சியினை மாணவ, மாணவிகள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சியினை இளைஞர்கள், மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்குவதுடன், தொழில்கள் மேற்கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று சமூக ரீதியிலும் சமநிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனித நேய வார விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே மாணாக்கர்கள் கல்வியினை பயில வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும். கல்வி பயின்று பொருளாதார முன்னேற்றம் பெற்றால் சமூகத்தில் சமநிலை தானாகவே வந்து விடும். இதனை மனதில்கொண்டு மாணவர்கள் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெற வேண்டும் என கலெக்டர் பேசினார். தொடர்ந்து, நாட்டுப்புறப்பாடல், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வரவேற்பு நடனம், குழுநடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப்பெற்ற வெத்தியார்வெட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குடி ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, பூவாணிப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு பரிசுகளையும். மேலும், 3 பயனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினையும் கலெக்டர் வழங்கி, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

முன்னதாக தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மேலாளர் தாட்கோ கவியரசு, தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ஆனந்தன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், தலைமையாசிரியர்கள் மகாதேவன், சண்முகவேலு, தமிழரசி, அரசு அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மனிதநேய வார நிறைவு விழா; மாணவர்கள் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெற வேண்டும்: அரியலூர் கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article