சென்னை: கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்த வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லியில் சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று கையில் பைகளுடன் அமர்ந்து தானாக பேசிக்கொண்டும், சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, அருகில் சென்று அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தபோது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார்.
மேலும் இளம்பெண் என்பதால் அவர் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து அவர் வைத்திருந்த பையை வாங்கிப் பார்த்தபோது அதில் அவர் பட்டப்படிப்பு படித்த சான்றிதழ்கள் வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், விசாரித்தபோது அந்த பெண் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது பெண்ணின் சகோதரர் பாலாஜி என்பவர் பேசியுள்ளார்.
அதில், அந்தப் பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்ததால் சிகிச்சைக்காக மாத்திரை சாப்பிட்டதாகவும், கடந்த மாதம் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார். உடனடியாக அந்த பெண்ணின் உறவினர்களை காவல் நிலைய வருமாறு போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையே அந்தப் பெண்ணிற்கு போலீசார் உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தனர். இந்நிலையில், அந்த பெண் 2 குச்சிகளை கையில் எடுத்துக் கொண்டு பேராசிரியர் போல் சாலையில் நடந்து சென்று திடீரென தனக்கு தானே பேசிக் கொண்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து மீண்டும் அழைத்து வந்து அவரது உறவினர்கள் வந்தவுடன் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அவர் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கீதா (33) என்பதும், பட்டப்படிப்பு முடித்த இவர் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிலையில் வேலையில் இருந்து நின்று விட்டதாகவும், கடந்த ஒரு மாதமாக சென்னையில் வேறு இடத்தில் பணிபுரிந்து வருவதாக குடும்பத்தினர் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர். மேலும் அவர் உரிய மாத்திரைகள் எடுக்காததால் மன நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போக்குவரத்து போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த பேராசிரியை மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார் appeared first on Dinakaran.