மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள்!

3 weeks ago 6

ஒருபுறம் இன்றைய மாணவர்களின் ஆற்றலும் திறனும் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுவருகிறது. இது மகிழ்ச்சி யான விஷயம். இப்படி மாணவர்களின் பல்நோக்குத் திறன்கள் மேம்பட்டு வருகிற இந்தச் சூழலில் இன்னொரு புறம் மாணவர்கள் பலமுறை நாக்குகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் முழுமையாக விடுபட வேண்டும்.‌ அப்போதுதான் மாணவர்கள் கல்வி சிறப்பாக அமையும். எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

ஏன் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்?

மாணவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச வேலைகளை நாம் உற்றுக் கவனித்தாலே அவர்களின் மன அழுத்தத்திற்கான காரணம் நமக்குப் புரிந்துவிடும். காரணங்கள் நுட்பமானவை. ஆனால், தீவிரமான விளைவை ஏற்படுத்தக்கூடியவை. அதிகாலை எழுந்தவுடன் மாணவர்களுக்குக் கண் முன்னால் வந்து நிற்பது அன்றைய வீட்டுப் பாடங்கள். அதிலும் முக்கியமாக ஒன்று, தேர்வுக்குத் தயாராக வேண்டும். அன்று பள்ளியில் வழங்கப்பட்டுள்ள ஒப்படைப்புகளை (அசைன்மென்ட்டுகள்) முடிக்க வேண்டும்.‌ செய்முறைத் தேர்வுகள் இருந்தால் அதற்குத் தயாராக வேண்டும். பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற வேண்டும். மேலும், அதில் பரிசு வாங்க வேண்டும். (போட்டிகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பத்தின் பேரில் இல்லாமல், கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும், கண்டிப்பாகப் பரிசு வாங்க வேண்டும் என்பது சில பள்ளிகளில் நிபந்தனையாக இருக்கின்றன)

சிறப்பு வகுப்புகள்:

சில பள்ளிகளில் காலை ஏழு முப்பது மணிக்குச் சிறப்பு வகுப்புகள் தொடங்கிவிடுகின்றன. பிறகு காலை ஒன்பது மணிக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகின்றன. அதைத்தொடர்ந்து மீண்டும் சிறப்பு வகுப்புகள் தொடங்கி மாலை ஆறு முப்பது மணிக்குத்தான் ஒரு நாள் வகுப்புகள் நிறைவு பெறுகின்றன. தொடர்ந்து அவர்கள் சொந்த வாகனத்திலோ அல்லது பள்ளி வாகனத்திலோ வீடு வந்து சேர்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு மணி நேரம் கூட ஆகிறது.‌ அதற்குப் பிறகு அவர்கள் கொஞ்சமாகத் தங்களை ஆசுவாசப்படுத்தி புத்துணர்ச்சி கொள்வதற்குக் கூட நேரமில்லை. மீண்டும் மறுநாள் பள்ளிகளில் செய்ய வேண்டிய வேலைகள் கண் முன் வந்து நிற்கின்றன.‌

வீட்டுப் பாடமாகப் பக்கம் பக்கமாகச் சில பாடங்களை எழுத வேண்டி யிருக்கிறது.‌ மறுநாள் பல பாடங்களில் வாராந்திரத் தேர்வு, மாதாந்திரத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் தயாராக அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? பல வீடுகளில் மாணவர்கள் இரவு 12 மணி வரை கண் விழித்து இருப்பதையும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதையும் பார்க்கிறோம். மாணவப் பருவத்தில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நல்ல ஆழ்ந்த உறக்கம் வேண்டும். ஆனால், இன்று நகர்ப்புறங்களிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி மாணவர்களுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம்கூட முழுமையாகக் கிடைப்பதில்லை. இவ்வளவு குறைந்த நேரமே தூங்கினாலும் கூட அவர்களால் பள்ளியில் வழங்கப்பட்டுள்ள வேலைகளை முடிக்க முடிவதில்லை. இதனால் ஒவ்வொரு பாடவேளையிலும் ஆசிரியர்கள் என்ன சொல்வார்களோ? எப்படித் திட்டுவார்களோ என்ற ஒரு பயத்தோடு தான் ஒவ்வொரு பாட வேளையையும் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

பள்ளிகளில் ஒப்படைப்புகள் வழங்கும்போது அதனை எழுதுவதற்கு நேரம் வழங்க வேண்டும். ஒரே நாளில் ஐந்து தேர்வுகள் வைத்தால் மாணவர்கள் எந்தத் தேர்வுக்குத் தயாராவர்கள்? சில பள்ளிகளில் ஒரு நாளைக்கு ஒரு பாடத்தில் மட்டுமே வாராந்திரத் தேர்வு, நடைபெற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பல பள்ளிகளில் அனைத்துப் பாடங்களிலிருந்தும் தினசரித் தேர்வுகளும் ஒப்படைப்புகளும் வழங்கப்படுகின்றன.‌ வீட்டுப்பாடம் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகப் பக்கம் பக்கமாகப் புத்தகத்தைப் பார்த்து அப்படியே எழுதச் சொல்கிறார்கள்‌. இதை எழுதி முடிக்கவில்லை என்றால் தண்டனை வேறு.

அடிக்கக் கூடாது என்று விதி இருந்தாலும் கூட அடிப்பதைத் தாண்டி மாணவர்களை மற்ற மாணவர்கள் முன் திட்டுவதால் மனரீதியான மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு ஏற்படுகின்றன‌. (ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டுவதை மாணவர்கள் பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்‌. ஆசிரியர்கள் நமக்குக் கடவுள், நல்ல வழிகாட்டி என்ற மனநிலைதான் மாணவர்கள் மனதில் இருக்க வேண்டும். அதே சமயம் மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்துவிட்டு அதைச் செய்ய முடியாமல் வரும் மாணவர்களைத் திட்டுவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்)

சில பள்ளிகளில் ஒரே ஒரு ‘மாதிரிக்’ கணக்கைப் போட்டுவிட்டு பிறகு பயிற்சி முழுவதையும் மாணவர்கள் வீட்டுப் பாடமாகச் செய்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதுவும் ஒரு விதமான பயிற்சிதான் தவறில்லை என்றாலும் கூட மாணவர்கள் அந்தப் பயிற்சியை முழுமையாகச் செய்வதற்கு நேரம் தர வேண்டாமா?

அம்மா சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும் பொழுது குழந்தைகள் கையில் பாடப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடங்களைப் படிக்கும் காட்சிகள் சங்கடமானவை. மாணவர்களின் மன அழுத்தத்திற்கான காரணங்கள் இன்னும் நுட்பமானவை. ஒரு தேர்வில் 90 மதிப்பெண்கள் அளவுக்கு ஒரு மாணவர் எழுதியிருந்தார் என்றால் மிகச் சிறப்பாக(ஸ்ட்ரிக்டாக) திருத்துவதாகக் கூறிக்கொண்டு 60 மதிப்பெண்கள் மட்டுமே பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. குறைந்த மதிப்பெண்களோடு வீட்டிற்குச் சென்றால் மாணவர்களால் பெற்றோர்களை எதிர்கொள்ள முடிவதில்லை. இது மாணவர்களை மனத்தளவில் சோர்வடையச் செய்கின்றன.

குருவித் தலையில் பனங்காயை வைப்பது போலப் பெரிய பெரிய பாடத்திட்டங்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பாட வேளையில் முடிக்க வேண்டும் என்பதும் ஒருவிதமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் பள்ளிகளில் கணக்கில்லாமல் போட்டிகள் நடைபெறுகின்றன. பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசை, நாடகம், ஓவியம் இவை தவிர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இவையெல்லாம் மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர செய்யப்படும் ஏற்பாடுகள். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புகள். பாராட்டுக்குரியதுதான். என்றாலும் மாணவர்கள் போட்டிக்காகத் தயாராக நேரம் தர வேண்டாமா? குறுகிய கால அவகாசத்தில் போட்டிகளுக்குத் தயாராக வேண்டும் என்பது மாணவர்களைச் சோர்வடையச் செய்வதுடன் மன அழுத்தத்தையும் உண்டுபண்ணுகிறது.

போட்டிகளுக்கு மன விருப்பத்துடன் தயாராக வேண்டிய மாணவர்கள், ஒரு விதமான டென்ஷனுடன் தயாராகிறார்கள். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

மாணவர்களின் நேரம் கருதி ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவர்களால் எவ்வளவு பாடங்களை முடிக்க முடியுமோ, எவ்வளவு வேலைகளை ச்செய்ய முடியுமோ, அவ்வளவு வேலைகளைத் தருவதுதான் சிறப்பானதாக இருக்கும். பள்ளி அளவில் தேர்வுகள் அறிவிக்கப்படும் போதும் அதற்குத் தயாராகப் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.‌

மாணவர்கள் நேர்மறையான மனநிலையுடன் பழகுவதற்கு வாய்ப்புகளும், வாழ்வியல் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். மாணவர்கள் மனதில் குழப்பங்கள், பொறாமை உணர்வுகள், பழிவாங்கும் உணர்வுகள் தலை காட்டலாம். அவற்றைத் தொடக்கத்திலேயே அகற்றப் போதிய சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தருவது மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அது அவர்களின் நேர்மறையான எண்ணத்தோடு பழகுவதற்கு உதவும். அதுபோல வீட்டிலும் இனிமையான சூழ்நிலைகள் நிலவ வேண்டும். அன்பான உறவுகள், நேசிக்கும் நண்பர்கள், இனிமையான குடும்பச்சூழல் போன்றவை அமையும்போது மாணவர்களின் மன அழுத்தம் குறைகிறது.

பள்ளியிலும் மனஅழுத்தம் வீட்டிலும் சிரமமான சூழல் என்றால் மாணவர்களால் அதை தாங்கிக்கொள்ள இயலாது, என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்கிய மன மகிழ்ச்சியான மாணவர் சமூகமே மகத்தான உலகம் படைக்கும். இன்னும் படிப்போம்!

The post மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article