மந்தகதியில் நடக்கும் படப்பை மேம்பாலப் பணிகளால் பொதுமக்கள் அவதி: அலுவலக நேரங்களில் கனரக வாகனங்களும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல்; பருவமழைக்கு முன்னதாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா?

3 months ago 15

* சிறப்பு செய்தி
18 மாதங்களில் முடிக்க வேண்டிய படப்பை மேம்பாலம் பணிகளை ஒப்பந்ததாரர்கள் மந்தகதியில் மேற்கொள்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தாம்பரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் படப்பையின் வழியாக ஒரகடம் சிப்காட்டுடன் மாநில நெடுஞ்சாலை இணைகிறது. இந்த சாலை வழியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம் சிப்காட் பகுதியில் ெதாழிற்சாலைகள் அதிகரிப்பின் காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்ததால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலையான வண்டலூர் – வாலாஜாபாத் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் வாலாஜாபாத் சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்ததை தொடர்ந்து படப்பை பஜார் பகுதியில் காலை 8 மணி முதல் அலுவலக நேரங்களான 10 மணி வரை அதேபோன்ற மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும் சாலையைக் கடக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் படப்பை பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

படப்பை புறவழிச்சாலை, நீர்வழித்தடங்கள் வழியாக செல்வதாலும் அதிகமான நிலஎடுப்பு, பொதுமக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் ஆகியவற்றால் புறவழிச்சாலைக்கு பதிலாக பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புறவழிச் சாலைக்கான நில எடுப்பு பணிகளை ரத்து செய்து ஏற்கனவே வழங்கப்பட்ட நிர்வாக ஒப்புதல் ரூ.189.81 கோடிக்கு மிகாமல் ரூ.25.52 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது. இப்பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பல்லடுக்கு மேம்பாலம் கட்டுவதற்காக எந்த முதற்கட்ட பணிகளும் தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தப் பணிக்கான ஜூன் மாதம் 2021ம் ஆண்டு இரண்டாவது டெண்டருக்கு அழைக்கப்பட்டது. அதன்படி யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற நிறுவனத்துடன் 18 மாதங்களில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்படி படப்பை பஜார் பகுதியில் சுமார் 690 மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.26.64 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை மேம்பாலம் கட்டும் பணி முடிவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. ஆனால் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது வரை 45 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாலப்பணிகள் தாமதமாவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்தவை: பாலப்பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றச் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இந்தாண்டு பிப்ரவரி மாதம் கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரருக்கு ஜனவரி 2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளான 12 அடித்தளம், 12 தூண்கள், 12 தாங்கும் தூண்கள் மற்றும் 5 கான்கிரீட் தளம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மழைக் காலத்திற்குள் 75 சதவீதம் பணிகள் முடிக்கப்படும். வரும் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

மேலும் வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் படப்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அலுவலக நேரங்களில் பொது போக்குவரத்துடன் கனரக வாகனங்களும் இயக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 5 நிமிடங்களில் கடக்க வேண்டிய நிலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, அலுவலக நேரங்கள் மற்றும் அலுவலகம் முடிந்து வரும் நேரங்களிலாவது கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்களில் பெரும்பாலோனோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

* படப்பை பஜார் பகுதியை கடக்க….
சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதனால் வருங்காலத்தில் பெரும் விபத்தினை தவிர்க்கலாம். அதேபோல் இந்த வழியாக அதிகளவில் கனரக வாகனங்கள் செல்கின்றன. கட்டுமான பணியின் காரணமாக சாலையின் நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு கனரக வாகனம் சென்றால் அதனை தொடர்ந்து செல்லும் வாகனங்கள் படப்பை பஜார் பகுதியை கடக்க குறைந்தது 30 நிமிடங்கள் ஆகிறது. எனவே, கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்களுக்கு என தனித்தனி நேரம் ஒதுக்க நடவடிக்கை வேண்டும் என்கின்றனர்.

பணியின் தற்போதைய நிலை…
* 690 மீட்டர் நீளம், 17.20 அகலம் கொண்டது இந்த
மேம்பாலம்.
* 11 கான்கீரிட் தளத்தில் (Deck slab) 5 கான்கீரிட் தளம் முடிக்கப்பட்டுள்ளது.
* 4 வழித்தடமாக அமைக்க உள்ளது.
* 12 தூண்கள், 12 தாங்கும் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
* ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

* இரும்பு தடுப்புகளால் ஆபத்து…
அப்பகுதிமக்கள் கூறியதாவது: இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பால கட்டுமான பணியால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேம்பாலம் அமைக்கும் பகுதியில் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியான 6 வழிச்சாலை செல்லும் படப்பை தற்போது குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த அச்சமும், உயிர் பாதுகாப்பும் இல்லாத நிலை நீடிக்கிறது. மேலும் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு பலகையில் இரவு நேரங்களில் வருபவர்கள் மோதிக் கொள்கின்றனர். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

The post மந்தகதியில் நடக்கும் படப்பை மேம்பாலப் பணிகளால் பொதுமக்கள் அவதி: அலுவலக நேரங்களில் கனரக வாகனங்களும் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல்; பருவமழைக்கு முன்னதாக பள்ளங்கள் சரி செய்யப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article