மத்திய பிரதேச மாநில பாஜக ஆட்சியில் மதுபான ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.15 கோடி போலி வங்கி உத்தரவாதம்: கலால், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு

2 days ago 3

போபால்:மத்திய பிரதேச மாநில பாஜக ஆட்சியில் மதுபான ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 15 கோடி மதிப்பில் போலி வங்கி உத்தரவாதம் அளித்த விவகாரத்தில் கலால், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் கலால் வரிக் கொள்கையின்படி, ஒருவர் மதுபான ஒப்பந்தம் (அரசின் அனுமதியுடன் மதுக்கடைகளை நடத்துவதற்கான அனுமதி) பெற வேண்டுமானால் வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும்.

பொதுத்துறை வணிக வங்கி அல்லது தனியார் துறை வணிக வங்கி அல்லது மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புற வங்கிகளிடமிருந்து மட்டுமே வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். ஆனால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் சிலருக்கு மதுபான ஒப்பந்தம் பெறுவதற்காகன உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனையும் மாநில அரசின் கலால் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உத்தரவாதம் அளித்த கூட்டுறவு வங்கியானது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டது இல்லை என்பதால், வங்கிகளின் உத்தரவாத அனுமதி விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் பி.கே.மாலா என்பவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ரேவா மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘ரேவா மாவட்ட கலால் அதிகாரி அனில் ஜெயின், கலால் வரிக் கொள்கை விதிகளை மீறி, சில மதுபான ஒப்பந்ததாரர்களிடம் போலி வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். வங்கிகளின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்ட அனில் ஜெயின், இந்தக் குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். இவரின் மோசடி ெசயலுக்காக கூட்டுறவு வங்கியின் மேலாளர் மற்றும் கலால் துறையின் அதிகாரிகளை பயன்படுத்திக் கொண்டார். மதுபான ஒப்பந்ததாரர்களுக்கு சொத்துக்கள் பாதுகாப்பு அல்லது வைப்புத்தொகை இல்லாமல், போலி வங்கி உத்தரவாதத்தை கொடுத்துள்ளனர். கூட்டுறவு வங்கியின் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு தனியாக விசாரணை நடத்தியது. அதன்படி வங்கி மேலாளர், கலால் துறையினர், மதுபான ஒப்பந்ததாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

அதனால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர், மதுபானக் கடை நிர்வாகிகள் 5 பேர், ரேவா மாவட்ட கலால் அதிகாரி மற்றும் ஊழியர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. மோர்பா மாவட்ட கூட்டுறவு வங்கியின் அப்போதைய கிளை மேலாளர் நாகேந்திர சிங் ரூ.15 கோடியே 32 லட்சத்து 23 ஆயிரத்து 440 மதிப்புள்ள 14 போலி வங்கி உத்தரவாதங்களை வழங்கி உள்ளார். இவற்றில், 9 வங்கி உத்தரவாதங்கள் மதுபான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் ரேவா, சிங்க்ரவுலி, உமாரியா, சத்னா மாவட்டங்களில் மதுபான ஒப்பந்த உரிமங்களைப் பெற இதைப் பயன்படுத்தினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர். மதுபான ஒப்பந்ததார்களுக்கு போலி வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டது, அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்த போது தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. தற்போதும் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் மதுபான ஒப்பந்தத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

The post மத்திய பிரதேச மாநில பாஜக ஆட்சியில் மதுபான ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.15 கோடி போலி வங்கி உத்தரவாதம்: கலால், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article