நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு சொந்த கிராமத்தில் நேற்று மாலையில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று மதியம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
இந்திய விண்வெளி துறையின் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த சாதனையானது நாட்டிற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து மகிழ்ச்சி அடையும் தருணம் இது. இஸ்ரோவில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. நாட்டில் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்திய விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.