சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்கள் '40/40' என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது , நாடாளுமன்றத்துக்குச் சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்குத் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர். மத்திய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்பதை திமுக எம்பிக்கள் நிரூபித்துள்ளனர். தமிழக எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவிக்க வேண்டியது முக்கியம் என கருதுகிறேன். தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளனர். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து, நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
திமுக எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள், நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு, இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடப்பது பாஜக ஆட்சியில் அரிதாகிவிட்டது. தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் நடத்த முடியாது என அவையில் எம்.பி.க்கள் முழங்கினர். மத்திய அரசு இனியும் திருந்தவில்லை என்றால் தமிழ்நாடு மக்கள் உரிய நேரத்தில் பதிலடி தருவார்கள். பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது பிரதமர் வேடிக்கை பார்த்தார்.
அரசியல்சட்டத்தின் 75ம் விழா கொண்டாட்டத்தின்போது அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவே அவதூறு செய்து இழிவுபடுத்திப் பேசுவது, பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித் தந்த அண்ணலுக்கு அவதூறு.. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.