மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

2 days ago 3

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வைத்து அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும்.

கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி என்பது 53 சதவீதமாக உள்ளது. தற்போது 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. அப்போது ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படி அரியர்ஸ் உடன் வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என்று மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 2 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தி உள்ளது ஊழியர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article