மதுரை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் முதல் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரையிலான 9 மணி நேரத்தில் மட்டும், நகர் பகுதிகளில் 9.8 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக, பிற்பகல் 3 மணிக்கு பிறகு சுமார் 15 நிமிடங்களில் மட்டும், 4.5 செ.மீ மழை கொட்டியது.
இதன்படி நேற்று காலை முதல் இரவு வரை 14.3 செ.மீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியது. நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மழையால் ஐகோர்ட் மதுரை கிளை சுற்றுச்சுவரும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளுத்து வாங்கிய மழையால் வைகை ஆற்றுக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் சங்கீதா நேரடியாக ஆய்வு செய்தார்.
* முதல்வர் அதிரடி உத்தரவு
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமாலை கேட்டறிந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், மக்களுக்கு தேவையாக உதவிகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
The post மதுரையில் வரலாறு காணாத மழை: வீடுகளுக்குள் வெள்ளம், ஐகோர்ட் சுற்றுச்சுவர் இடிந்தது appeared first on Dinakaran.