சென்னை,
மதுரையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நிரந்தர தீர்வு காண முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"25.10.2024 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இன்று (26.10.2024) காலை 8.30 முடிய மதுரை மாவட்டத்தில் சராசரியாக 4.73 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சித்தம்பட்டி, இடையம்பட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், குப்பனம்பட்டி, கள்ளந்திரி, தள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 10 செ.மீ. வரை கனமழை பதிவானது. இதன் காரணமாக 20 பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக குறைந்த கால அளவில் பெய்த கனமழையின் காரணமாக மதுரை மாநகராட்சிப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள செல்லூர், விளாங்குடி, ஆனையூர் பகுதிகளில் 374 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
அன்று இரவே தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். மழையால் நீர் தேங்கிய பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு காண தொடர்புடைய துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவின் படி. அமைச்சர்களின் ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.