மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா குறித்து சட்டமன்றப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் சேகர்பாபு பதிலுரை

2 days ago 2

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ அவர்கள் “மதுரை மாநகரில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார். பேரவை தலைவர் அவர்களே தமிழக முழுவதும் அறிவிக்கப்பட்ட திருவிழாக்களாக 11 திருவிழாக்கள் திருக்கோயில்களில் கடைபிடிக்கப்படுகின்றது. முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் இந்த 11 திருவிழாக்களுக்காக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை இந்து சமய அறநிலையத்துறை நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளை கொண்டு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு கூட்டங்களை நடத்தி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக கடந்த 11ஆம் தேதி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து 12ஆம் தேதி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழுக் கூட்டம் அதன் தலைவர் முன்னாள் பேரவை தலைவர் பி. டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் மனைவி ருக்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் 13ஆம் தேதி மதுரைக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள்.

உறுப்பினர் அவர்கள் 190 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகின்ற மேம்பால பணியினால் போக்குவரத்து தடை ஏற்படும் என்று கூறி இருக்கின்றார். இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் அந்த துறையின் சார்பில் ஆய்வு செய்து இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் அந்தப் பாதையை செப்பனிட்டு பக்தர்கள் வருகைகேற்றார் போல் அது மாற்றி அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கின்றார்கள். தமிழக முதல்வர் அவர்கள் இது தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களையும், என்னையும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

உறுப்பினர் அவர்கள் துறைக்கு நல்ல பெயர் வேண்டும் என்றார் மேலும், அவர் அங்கே நடக்கின்ற அனைத்து திருவிழாக்களிலும் பங்கேற்கின்றார். அவர் அமைச்சராக இருந்தபோது என்ன மரியாதை வழங்கப்பட்டதோ அந்த மரியாதையோடு தான் இப்போதும் அங்கே திருவிழாக்களில் அவர் பங்கேற்கின்றார். பக்தர்கள் எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் நல்ல முறையில் பாதுகாப்போடு சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். 2020-21 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அங்கே திருவிழா நடைபெறவில்லை கள்ளழகர் ஆற்றிலே இறங்குகின்ற வைபவம் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகள் தடைப்பட்ட காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு திருவிழா நடக்கின்ற போது அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டதால் நெரிசலின் காரணமாக விரும்பத்தகாத சம்பவம் என்று சொல்லப்படுகின்ற அந்த சம்பவமானது நெரிசலால் ஏற்பட்டது.

அந்த நெரிசலால் இறந்தவர்களுக்கு கூட முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 7 லட்ச ரூபாயை வழங்கியிருக்கின்றார். வருகின்ற காலகட்டங்களில் அது போல் எதுவும் நடைபெறாமல் இருக்கவும், சிறப்பான முறையில் திருவிழாவினை நடத்திடவும் அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள இருக்கின்றோம் என்பதனையும் உறுப்பினர் செல்லூர் ராஜு அவர்கள் கூறியது போல இந்த திருவிழா சிறப்பான முறையில் ஜே ஜே என்று நடைபெறும் பேரவைத்தலைவர் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் அவர்கள் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது என்றார்கள். அவர் தினந்தோறும் நாளிதழ்களை படிப்பதில்லை என்று கருதுகிறேன். நேற்றைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சரி வர மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவுக்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை முழுமையாக நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்த போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதை முழுமையாக படித்துப் பார்த்து சிறப்பான ஏற்பாடுகள் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம். உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தவுடன், அந்த மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்.

நான் இந்த சட்டமன்றத்தில் உறுப்பினர் அண்ணன் செல்லூர் ராஜூ அவர்கள் ஒவ்வொரு முறையும் பேசுகின்ற போது கடந்த ஆட்சி காலத்தில் எதையெல்லாம் அவர் சொல்லி நடக்கவில்லையோ அவற்றையெல்லாம் இந்த ஆட்சியில் சொல்லி நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்றைக்குக்கூட அவர் பேசுகின்ற போது அரசு கல்லூரி வேண்டும் என்று இந்த ஆட்சியில் தான் நடைபெறும் என்றும் கடந்த ஆட்சியில் நடக்கவில்லை என்பதால்தான் ஆட்சியில் உங்களை அமரவைத்தார்கள். இன்றைக்கு பேசும்போது கூட டாஸ்மாக் கடைகள் அவர்கள் காலத்தில் மூடப்படவில்லை உங்கள் ஆட்சி காலத்தில் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்.

இதையும் உங்களால் செய்ய முடியாதவை, இயலாததை செய்து முடிக்கின்ற ஆற்றல் படைத்த ஆட்சிதான் எங்கள் திராவிட மாடல் ஆட்சி என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொண்டு சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அவர் கூறியது போல கொடியேற்றம் மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல், ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை ஆகிய அனைத்தும் சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் மூன்று நாட்களும், நானும் அந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் அண்ணன் மூர்த்தி அவர்களும், அண்ணன் பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்களும் உங்களோடு இருப்போம். ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள ஆய்வில் உறுப்பினர் அவர்களும் கலந்து கொள்ள வேண்டும். உங்கள் ஆலோசனைகள் ஏதாவது இருந்தால் கூறுங்கள் உங்கள் காலத்தில் நிறைவேற்றாதவை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம் என்று பேரவை தலைவரின் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா குறித்து சட்டமன்றப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் சேகர்பாபு பதிலுரை appeared first on Dinakaran.

Read Entire Article