மதுரையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜேந்திரன்

3 months ago 11

மதுரை,

மதுரை அழகர்கோவில் சாலையில் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மதுரை தமுக்கம் மைதானம் அருகே அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், காந்தி தியான மண்டபம், காந்தி அஸ்தி உள்ள பகுதி மற்றும் காந்தியின் புகைப்படங்கள் அமைந்துள்ள அரங்கில் ஆய்வு செய்தார்.

அப்போது, காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள விருந்தினர் தங்கும் அறையை சீரமைக்க வேண்டும் என காந்தி அருங்காட்சியகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் உறுதி அளித்தார். பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில்,மதுரையில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மேம்படுத்த சுற்றுலாத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்த்து கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம், எந்த நாட்டில் இருந்து வந்துள்ளீர்கள் என விசாரித்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே, திருமலை நாயக்கர் மகாலில் லேசர் ஒளி-ஒலி காட்சிகள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தப்பட்டிந்த நிலையில் மீண்டும் லேசர் ஒளி-ஒலிக்காட்சிகள் தொடங்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு, மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்றார். மேலும், அதற்கான பணிகளையும் துரிதப்படுத்துமாறு அங்குள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Read Entire Article