மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் நாளை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நகரில் திருவிழா களைகட்டி வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளானா இன்று காலை 8 மணிக்கு அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் மதியம் 12 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுவாமி அதிகார நத்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். 8ம் நாளான (மே 6) நாளை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கில் மேலமாசி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படிக்கு அங்கு தங்கி, பின்னர் 3 மணியளவில் மேலக்கோபுரத் தெரு, மேலச் சித்திரைவீதி, வடக்குச் சித்திரை வீதி, கீழக்குச் சித்திரை வீதி வழியாக கோயில் வந்து சேருவர்.
பின்னர் இரவு 7.35 முதல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிப்பார். பின்னர் தங்கம், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருள்வர்.
மே 7ம் தேதி திக்விஜயம், மே 8ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மே 9ம் தேதி காலை திருத்தேரோட்டம் தொடங்கி 4 மாசி வீதிகளில் வலம் வரும். இதற்கிடையே மே 10ம் தேதி அழகர்மலையில் இருந்து அழகர் புறப்படுகிறார். மே 11ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவை, மே 12ம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரைக்குரிய நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடர இருப்பது, பக்தர்களை பரவசப்படுத்தி, விழா களைகட்ட வைத்துள்ளது.
The post மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் appeared first on Dinakaran.