மதுரை,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் மதுரையில் நேற்று தொடங்கி தற்போது வரை தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், தல்லாகுளம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், கிழக்கு ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் சித்திரை வீதி பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் கலந்துள்ளது. கோவிலுக்கு முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை கடந்துதான் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கோவிலுக்குள் நுழையும்போது தங்கள் கால்களை சுத்தம் செய்துவிட்டு உள்ளே செல்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.