மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில், வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட புற்கள் நடவு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதான வளாகம், 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ளது. நீச்சல்குளம், கபடி, கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தனித்தனி அரங்கங்கள் உள்ளன.
இங்கு தடகளத்திற்கு அமைக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம் பயன்படுத்த முடியாத நிலைக்குச்சென்றது. இதையடுத்து அது முழுமையாக அகற்றப்பட்டு ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான புதிய ஓடுதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஓடுதளத்தின் மேல் பகுதியில் முதற்கட்டமாக தார் ஊற்றப்பட்டு, பின்னர் மேல் பகுதியில் 2 அடுக்குகளாக உருக்கப்பட்ட ரப்பர் பால் ஊற்றப்பட்டது.
அடுத்ததாக ஓடுதளத்தின் நடுப்பகுதியில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு புற்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை கால்பந்து மைதானத்தில் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக டிராக்டர் உதவியுடன் மைதானத்தில் ஒரு அடி ஆழம் தோண்டப்பட்டு, அதிலிருந்தத செடி, கொடிகள் அகற்றப்பட்டது.
கால்பந்து மைதானத்தில் வீரர்கள் தவறி விழுந்தால் காயம் ஏற்படாது பாதுகாக்கும் வகையில், வெளிநாட்டு புற்கள் வளர்க்கப்படுவதாக தெரிகிறது. இதற்காக வரவழைக்கப்பட்ட புற்கள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது. இப்பணிகளின் தொடர்ச்சியாக புற்கள் நன்கு வளர தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ‘‘கால்பந்து மைதானத்தில் புற்கள் நடவு செய்யும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும். பின்னர் தினமும் தண்ணீர் தெளிக்கப்படும். ஓடுதளம் திறப்பு விழா காணும் போது புற்கள் நன்கு வளர்ந்து கால்பந்து மைதானமும் விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும்’’ என்றார்.
The post மதுரை ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் கால்பந்து மைதானத்தில் வெளிநாட்டு புற்கள் நடவு appeared first on Dinakaran.