மதுரை முருக பக்தர்கள் மாநாடு; மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கண்டனம்

1 week ago 2

சென்னை: மதுரை முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு தமிழ மக்கள் இரையாக மாட்டார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, பி.கே.சேகர்பாபு நிர்வாகத்தின் கீழ் ஆன்மிக புரட்சியே நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் ஏழை, எளிய மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நற்பணிகள் நாள்தோறும் நடைபெற்று நாடே பாராட்டி வருகிறது.

இதை சகித்துக்கொள்ள முடியாத பாஜ பரிவாரங்கள் இந்து முன்னணி பெயரில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் அப்பட்டமான அரசியல் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள மக்களை பாசிச வலையில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் இரையாக மாட்டார்கள். இனி வருகிற காலங்களில் இத்தகைய முயற்சி நடப்பதை முறியடிக்க சாதி, மத எல்லைகளை கடந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. நீதிமன்ற அறிவுரையை முள் முனையளவும் மதிக்காமல் அவமதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ், பாஜ கட்சித் தலைவர்கள் உரை முழுவதும் அரசியல் சார்ந்தே அமைந்திருந்தது. தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

The post மதுரை முருக பக்தர்கள் மாநாடு; மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article