மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மரியாதை

2 months ago 12

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர், தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது.

தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த நிகழ்ச்சிகள் சொற்பொழிவு நடைபெற்றது. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் பொறுப்பாளர்கள் பழனி, ரவி, தங்கவேல், வெள்ளைச்சாமி, அழகுராஜா, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், சிவாச்சாரியார் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், லட்ச்சார்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஏராளமான பக்தர்கள், தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அலகு குத்தியும், காவடி எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல பலர் முடிக்காணிக்கையும் செலுத்தினர்.

ஏராளமான பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த தேவர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.

 

இந்நிலையில் இன்று தேவர் குருபூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு அரசு விழா நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பின்னர் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. சார்பில் விஜய பிரபாகரன், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும், சமுதாய அமைப்பினரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகின்றனர். 

தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில், பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் மண்டல ஐஜி தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள எஸ்.பி.க்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

300 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கூடுதலாக போலீசார் போடப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Read Entire Article