மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

8 hours ago 2

மதுரை: மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் புடைசூழ மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 6ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 7ம் தேதி அம்மன் திக்குவிஜயம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முத்திரை நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி இன்று காலை 4.30 மணியளவில் கோயிலில் இருந்து அம்மனும், சுவாமியும் தேர் நிலைக்கு புறப்பாடாகினர். 45 அடி உயர பெரிய தேரில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். 45 அடி உயர சிறிய தேரில் மீனாட்சியம்மன் எழுந்தருளினார். காலை 6.12 மணியளவில் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன், இந்து சமய அறநிலையத்துறை இணைக் கமிஷனர் மாரிமுத்து, கோயில் இணைக் கமிஷனர் கிருஷ்ணன் ஆகியோர் பெரிய தேரின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து காலை 6.27 மணியளவில் மீனாட்சியம்மன் எழுந்தருளிய சிறிய தேரோட்டம் தொடங்கியது.

திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சங்கரா… ஹர ஹர மகாதேவா… ஓம் நமச்சிவாயா… என விண்ணதிர கோஷம் முழங்கி வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி-அம்மன் தேர்கள் சிங்காரமாக ஆடி அசைந்து வலம் வந்தது. தேரோட்டத்தைக் காண மதுரை மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் என அதிகாலை முதல் வந்திருந்தனர். திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை, காளை ஆகியவை வலம் வந்தன.

சிவனடியார்கள் சங்கு, உடுக்கை, தூபி, மேளதாளம் ஆகியவற்றை ஒலித்துக் கொண்டே தேர் செல்லும் வீதியில் முன் சென்றனர். இளைஞர்கள் ஆர்வத்துடனும் வடங்களை பிடித்து தேர் இழுத்தனர். 5 கி.மீ சுற்றளவுள்ள 4 மாசி வீதிகளில் தேர் வலம் வந்தது. பகல் 12 மணியளவில் தேர்கள் நிலைக்கு வந்தன. இதையொட்டி மதுரை மாநகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன.

வைகை அணையில் தண்ணீர் திறப்பு;
மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மே 12ம் தேதி மாலை 6 மணிக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவத்தையும், வைணவத்தையும் இணைத்த திருவிழா;
400 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா மாசி மாதம் நடைபெற்றது. மதுரையில் 6 மாதங்கள் அன்னை மீனாட்சியும், 6 மாதங்கள் அப்பன் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்து வருகின்றனர். மாசி மாதத்தில் மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் நடந்ததால் மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இது ஒரு சைவத் திருவிழாவாகும்.இதைபோல, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று, மதுரை அருகே சோழவந்தானில் உள்ள தேனூர் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி மறுநாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கினார். இது வைணவத் திருவிழாவாகும். இந்த விழாவை மன்னர் திருமலை நாயக்கர் மதுரைக்கு மாற்றினார். தேனூர் மக்களுக்காக வண்டியூர் அருகே வைகை ஆற்றில் தேனூர் மண்டகப்படியை உருவாக்கிக் கொடுத்தார்.

தற்போது தேனூர் மண்டபத்தில் தான் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. சைவத்திருவிழாவையும், வைணவத் திருவிழாவையும் இணைத்த மன்னர் திருமலை நாயக்கர் சித்திரை மாதத்தில் மதுரை வைகை ஆற்றின் தென்பகுதியில் சைவத் திருவிழாவையும், வைகை ஆற்றின் வடபகுதியில் அழகர் ஆற்றில் இறங்கும் வைணவத் திருவிழாவையும் நடக்க ஏற்பாடு செய்தார். சைவத் திருவிழாவும், வைணவத் திருவிழாவும் இணைந்து மாபெரும் சித்திரைத் திருவிழாவாக மதுரையில் நடந்து வருகிறது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article