மதுரை: மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைக்க ஒன்றிய அரசு தன்னிச்சையாக உரிமம் வழங்கியதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த நவ. 7ல் வழங்கியது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம் வீணாவதுடன், பெரியாறு பாசன விவசாய நிலங்கள் தரிசாகும் சூழலும் உருவானது.
இதோடு தமிழி எழுத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள மாங்குளம் கல்வெட்டு, சமணப் படுகைகள், பாண்டியர் கால குடவரைகள் மற்றும் பழமையான கோயில்கள் உள்ளிட்டவையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், அழகர்கோவில் காப்புக் காடுகள் அழிவது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் தடம் தெரியாமல் போகும் நிலை ஏற்படும் அச்சம் உருவானது. வாழ்வாதாரம் மட்டுமின்றி, வாழ்விடமே அழியும் சூழலால் இப்பகுதி மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பி.மூர்த்தி, டங்ஸ்டன் திட்ட ஆய்விற்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதி தராது என உறுதியளித்திருந்தார். அரசின் சார்பில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசும் விளக்கமளித்திருந்தது. மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்கள் நடந்த கிராம சபை கூட்டங்களில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் உடனடியாக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளப்பட்டி கிராமத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ெகாண்டாடினர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கனிமவள திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். நாயக்கர்பட்டி தொகுதி உட்பட மூன்று தொகுதிகள் அடங்கிய பகுதியில் 193.215 ஹெக்டேர் (மொத்த பரப்பில் சுமார் 10 சதவீதம்) பரப்பளவில் பல்லுயிர்த் தளம் இருப்பதைப் பற்றி தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்த உரிமம் முதலில் ஆராயும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்பிறகு மேற்கொள்ளப்படும் புவியியல் ஆய்வில் இருந்து பெறப்பட்ட பூர்வாங்க ஆதாரங்களின் அடிப்படையில் தான் சுரங்கத்திற்கான பணிகள் தொடங்குகிறது. சுரங்க குத்தகை உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு ஏலதாரர் சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு முகமைகளிடம் இருந்து முறையான அனுமதிகளைப் பெற வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நலனுக்காக முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவது சுரங்கத்துறையின் பங்கு. அதன்பிறகு, விருப்ப கடிதம் வழங்குதல், கூட்டு உரிமம் மற்றும் சுரங்க குத்தகை உள்ளிட்டவை மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்பட்டால், கூட்டு உரிமம் அல்லது சுரங்க குத்தகையில் கையெழுத்திடுவதற்கு முன் மாற்றியமைக்கலாம்.
உற்பத்தி துவங்கியவுடன், அனைத்து வருவாயும் மாநில அரசையே சேரும். இந்த டங்ஸ்டன் தொகுதிக்கு விருப்பமான ஏலதாரர் அறிவிக்கப்பட்ட பிறகு, தொகுதிக்குள் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் இந்தத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இந்திய புவியியல் ஆய்வு மையம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக்கை மறுபரிசீலனை செய்கிறது. உயிரியல் பன்முகத்தன்மை வாய்ந்த பகுதியை டங்ஸ்டன் பிளாக்கிலிருந்து விலக்கி, எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கோரியுள்ளது. மேலும், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக்கின் ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்க அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மதுரை மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘கைவிடும் வரை போராட்டம்’
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பல்லுயிர் பாதுகாப்பு பகுதியை தவிர்த்து 1,800 ெஹக்டேரில் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சுற்றுச்சூழலை பாதுகாக்கும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். தமிழ்நாட்டின் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. 8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புறந்தள்ளியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும். ஒன்றிய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை முறியடிக்கும் வரை மக்கள் போராட்டம் தொடரும்’’ என்று கூறியுள்ளார்.
The post மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு: மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை appeared first on Dinakaran.