மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் மண்டல தலைவர்கள் உட்பட 47 பேருக்கு போலீஸ் சம்மன்: மேலும் பலர் சிக்குகின்றனர்? நிர்வாகம் விரைவில் மாற்றியமைப்பு

5 hours ago 1

மதுரை: மதுரை மாநகராட்சியில் 2022, 2023ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை சொத்து வரி வசூலில் வருவாய் இழப்பிற்கான முறைகேடு நடந்திருப்பது கமிஷனர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் சகா உசேன், ராஜேஷ், முகமது நூர் என 8 பேர் கைதாகினர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா முன்னிலையில், மண்டலம் 1 தலைவர் வாசுகி தவிர, மண்டலம் 2 சரவண புவனேஸ்வரி, மண்டலம் 3 பாண்டிச்செல்வி, மண்டலம் 4 முகேஷ் சர்மா, மண்டலம் 5 சுவிதா ஆகிய தலைவர்களிடம் விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், 4 மண்டல தலைவர்களுடன், கவுன்சிலர்களான நகரமைப்புக் குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமி ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் ெகாடுத்துள்ளனர். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாநகராட்சியில் உள்ள மண்டலத் தலைவர்களின் அறைகள் மூடப்பட்டு விட்டன.
இந்த முறைகேடு வழக்கில் மண்டலத் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என 47 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 தலைவர் வாசுகி குறித்த விசாரணையில் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால், அவரது ராஜினாமா கடிதம் கைவிடப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம், மாநகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படும் வகையில் விரைவில் மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைக்கப்படுகிறது. முதல்வரின் அனுமதியின்பேரில் புதிய நிர்வாக அமைப்பு நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முறைகேடு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடப்பதை உறுதி செய்யும்விதமாக முறைகேட்டில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

The post மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகார் மண்டல தலைவர்கள் உட்பட 47 பேருக்கு போலீஸ் சம்மன்: மேலும் பலர் சிக்குகின்றனர்? நிர்வாகம் விரைவில் மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article