மதுரை சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதி நிறைவேற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

3 weeks ago 4

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை சித்திரை திருவிழாவில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவில் பக்தர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளான இலவச தரிசனம், குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் மற்றும் சுவாமிகள் வீதி உலா வரும் சாலைகள் சீரமைப்பு உள்ளிட்டவற்றை முறையாக செய்திருக்க வேண்டும்.

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி சரி செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதே போல அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வின்போது போக்குவரத்து நெரிசலின்றி சீர் செய்ய வேண்டும். திருவிழா காலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை நிறைவேற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் போதுமான நடவடிக்கை இல்லை.

எனவே, இவற்றை முறையாக செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், தற்போது திருவிழா துவங்கி நடந்து வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை நியாயமானது. மனுதாரர் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனு மீதான விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

The post மதுரை சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதி நிறைவேற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article