மதுரை, கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு: ஒரே இரவில் 16 செ.மீ மழை கொட்டியது

3 months ago 17

* குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது, 2 பேர் உயிரிழப்பு; வீடுகளும் இடிந்தன

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே இரவில் 16 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மதுரை நகர்பகுதியில் ஒரே இரவில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தல்லாகுளம், பெரியபட்டியில் 12 செ.மீ. மதுரை வடக்கில் 11 செ.மீ. பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக, மதுரை மணி நகரம் ரயில்வே கர்டர் பாலத்தில் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் போல நீர் பெருக்கெடுத்து ஓடியது. போலீஸ் வாகனம் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. போலீசார் வெளியில் குதித்து நீந்தி தப்பினர். தொடர்ந்து எச்சரிக்கையை மீறி உள்ளே சென்று ஒரு கார் சிக்கியது. இதில் இருவர் மாட்டிக்கொள்ள போலீசார் நீச்சலடித்தபடி சென்று காரின் கதவுகளை திறந்து உள்ளே சிக்கிய இருவரையும் கயிறுகள் கட்டி பத்திரமாக மீட்டனர்.

மதுரை காதக்கிணறு அருகே ஓடை உடைப்பு ஏற்பட்டு செம்மியனேந்தல் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். வீடுகளும் இடிந்து விழுந்தன. கொட்டாம்பட்டி அருகே பரமாண்டி தோப்பு பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து விவசாயி கணேசன் (50) உயிரிழந்தார். மேலூர் அருகே பூஞ்சுத்தி விவசாயி ராமச்சந்திரன் (58), வயலில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட முயன்றபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் தாக்கி பலியானார்.

மதுரை புதூர், உத்தங்குடி டிஎம் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழையால் பல மரங்கள் சாய்ந்து, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பகலில் இருந்து கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பனி மூட்டத்துடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஊட்டி, குந்தா, கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பர்லியார் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன.

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன. போலீசார், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் சென்ற மண்சரிவு மற்றும் மரங்களை அகற்றினர்.  கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணியளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், சங்கனூர், கணபதி, சாய்பாபாகாலனி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையாக துவங்கி கனமழையாக பெய்தது.

தொடர்ந்து பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் உள்பட மாநகர் முழுவதும் கனமழை கொட்டியது. 3 மணி நேரம் நீடித்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. அவினாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம் கீழ் பகுதிகளில் மழைநீர் 5 அடி தேங்கியது. 200 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதேபோல தேனி, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

* தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 300 பேர் தயார்
தேசிய பேரிடர் மீட்பு படை மையம் (4வது பட்டாலியன்) சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: கன மழை எச்சரிக்கை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகங்களில் செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டால் மழை, வெள்ள மீட்பு பணியில் ஈடுபட வீரர்கள் விரைந்து செல்ல மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், கயிறு, மருத்துவ முதலுதவி கருவிகள் போன்றவைகளுடன் தலா 30 பேர் கொண்ட 10 குழுவில் 300 மீட்பு படை வீரர்கள் தயாராக உள்ளனர்.

* கார் மீது மரம் விழுந்த வீடியோ வைரல்
கொடைக்கானலில் நேற்று மட்டும் சுமார் 8 செ.மீ. மழை பதிவானது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர், தங்களது பயணத்தை முடித்து கொண்டு நேற்று காலை காரில் ஊருக்குப் புறப்பட்டனர். அவர்களது கார் கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மூலையாறு அருகே சென்றபோது ராட்சத மரம் சரிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் நொறுங்கி 3 பேர் படுகாயமடைந்தனர். இருவர் சிறிய காயங்களுடன் தப்பினர். கார் மீது ராட்சத மரம் விழுந்த காட்சி தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post மதுரை, கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு: ஒரே இரவில் 16 செ.மீ மழை கொட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article