மதுராந்தகம் கடப்பேரியில் வெண்காட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

1 week ago 3

மதுராந்தகம்: மதுராந்தகம் கடப்பேரி வெண்காட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நேற்று காலை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கடப்பேரி பகுதியில் உள்ள மீனாட்சி அம்பாள் உடனுறை வெண்காட்டீஸ்வரர் கோயில் 700 ஆண்டுகள் பழமையான கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதற்காக ராஜகோபுரம், விமானங்கள், புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசப்பட்டது.

மேலும், உள்பிரகாரங்களில் கல்பதித்தல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்து சமய அறநிலைத்துறையில் வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று காலை 9 மணி அளவில் மிக விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த கும்பாபிஷேக விழாவானது, கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசை முழங்க விக்னேஸ்வரர் பூஜை, புண்யாஹவசனம், தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, பூரணாதி, தீபாராதனை, கிராம தேவதை உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனன், யாகசாலை நிர்மாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை சாந்தியாகம், திஷா யாகம், பிரசன்னா, பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், முதற்கால யாக பூஜை, எஜமான சங்கல்பம், பூரணாதி, தீபாரதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசேஷ சந்தி, பாவனா அபிஷேகம், இரண்டாம் காலை யாக பூஜை, வேதப்பாராயணம், மூன்றாம் காலையாக பூஜை, மூலவர் எந்திரம் ஸ்தாபனம், தத்துவாட்சனை, பூரண நதி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், திமுக நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக தினமான நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை கலசம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோபுரங்களுக்கும் மூலவர் சன்னதிகளுக்கும் கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு வெண்காட்டீஸ்வரருக்கும், மீனாட்சியம்மாள்,  பரிவார மூர்த்திகளுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

மேலும் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்தி வீதி உலா, மண்டலபிஷேகம் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், சிவாச்சாரியார்களும், உபயதாரர்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.

The post மதுராந்தகம் கடப்பேரியில் வெண்காட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article