சென்னை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், நிதியினை உயர்த்தி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதன் விவரம்: சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில், மதுரவாயல் காஞ்சிபுரம் இடையே உள்ள 60 கி.மீ. தூரச் சாலையினைச் சீரமைக்கும் வகையிலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் மிகச் சொற்பத் தொகையை மட்டுமே ஒன்றிய அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இந்த நெடுஞ்சாலையின் சீரமைப்பை தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்து 4 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இந்த நெடுஞ்சாலை இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில், இந்த சாலையின் சீரமைப்பிற்கு தற்போது வெறும் ரூ.8 கோடி மட்டுமே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையானது முறையான பராமரிப்பும், சரியான முதலீடும் இல்லாததையே உணர்த்துவதோடு, ஓட்டுநர்களையும் ஆபத்தான நிலைமைகளுக்கு உள்ளாக்குகிறது. அதிலும் குறிப்பாக சாலை விரிவாக்கப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான தடுப்புகள் (Barricades), பிரதிபலிக்கும் குறிப்பான்கள் (Reflective Markers) மற்றும் விளக்குகள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளவில்லை. சாலையில் குழிகள், மங்கலான விளக்குகள், முன்னறிவிப்பில்லாத திசைதிருப்புதல் போன்ற நடவடிக்கைகள் தொடர் விபத்துகளை ஏற்படுத்துவதோடு வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் அளிக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் சுங்கச் சாவடிகளிலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.140 கோடி வருவாய் வரும் சூழலில், அந்தத் தொகை சாலைகளின் பராமரிப்புக்கோ, மேம்பாட்டிற்கோ முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.
இதுபோன்ற செயல்களினால் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்மீது மக்களுக்குள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. 6வழிச் சாலை விரிவாக்க திட்டத்தில் ஏற்பட்டுள்ள பல ஆண்டு கால தாமதமே, சிறப்பான திட்ட மேலாண்மை தேவை என்பதை உணர்த்துகிறது. இந்தத் தாமதங்கள் ஏற்கனவே சென்னை பெங்களூரு விரைவுச்சாலையில் பின்னடைவுகளை ஏற்படுத்தியதோடு தற்போதுள்ள நெடுஞ்சாலையின் முக்கியமான பகுதிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பின்வரும் நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்.
* போதுமான நிதி வழங்குதல்: சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 8 கோடி நிதி மிகவும் குறைவானது, இந்தச் சுங்கச் சாவடிகள் அதிக வருவாயை ஈட்டுவதால், அதனை முறையாக மறுமுதலீடு செய்து, சிறந்த மின்விளக்குகள், சாலை அமைத்தல், பிரதிபலிப்பு குறிப்பான்கள் பொருத்துதல், பாதுகாப்பு தடுப்புகள் நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* திட்டப்பணிகளை வெளிப்படைத் தன்மையோடு விரைந்து முடித்தல்: ஆறுவழிச்சாலை விரிவாக்கத்தில் ஏற்பட்டுள்ள அளவு கடந்த கால தாமதமும் மெத்தனப்போக்கும் ஏற்கனவே சாலைப் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் சமரசம் செய்துள்ளது. எனவே இந்தத் திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படுவதையும், இனி ஏற்படும் தாமதங்களுக்கான பொறுப்பையும், ஒன்றிய அரசே ஏற்க வேண்டும்.
* சுங்கச் சாவடி வருவாயில் வெளிப்படைத்தன்மை: சுங்கச் சாவடி வருவாயை முறையாக சாலை மேம்பாட்டிற்கும், பாதுகாப்புக்கும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படைத்தன்மையோடு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், அதில் கணிசமானத் தொகையினை அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதையும் ஒன்றிய அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்.
* உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள்: போதுமான விளக்குகள் மற்றும் சாலைத்தடுப்புகள் போன்ற அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையைச் சரிசெய்வதோடு, இரவு நேரப் பயணிகளுக்கு வசதியாக High-mast lamps, ரப்பர் வேகத்தடைகள் மற்றும் பிரதிபலிப்புக் குறிப்பான்கள் உள்ளிட்டவற்றை நிறுவி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தயாநிதி மாறன் எம்.பி தெரிவித்துள்ளார்.
The post மதுரவாயல்-காஞ்சிபுரம் சுங்கச்சாவடிகளின் வருவாயை சாலை மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம் appeared first on Dinakaran.