மது ஒழிப்பு மகளிர் மாநாடு: திருமாவளவன் தலைமையில் இன்று நடக்கிறது

3 months ago 33

உளுந்தூர்பேட்டை,

தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யா வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனிராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்ட தோழமை கட்சியினர் கருத்துரை ஆற்றுகின்றனர்.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் தலைமையிடத்து பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநாடு பொதுமக்கள் மட்டுமின்றி சக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களே நடத்தும் இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மது மற்றும் போதை பொருட்களை முற்றாக ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது என்றும் மாநாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடன் பங்கேற்க உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்தார்.

Read Entire Article