டெல்லி: மதமாற்றம், கலப்பு திருமணம், அசைவ உணவு போன்ற காரணங்களால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவில் சமீப காலமாக சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாகப் பல்வேறு சமூக அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் ‘சமூகம் மற்றும் மதச்சார்பின்மை ஆய்வு மையம்’ வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2023ல் 33 ஆக இருந்த வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை, 2024ல் 122 ஆகவும் (270% அதிகரிப்பு) உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 38% குற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளது.
இதேபோல், ‘குடிமக்கள் அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பு’ வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக 180 வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 கொலைகள், 99 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அடங்கும். இந்த சம்பவங்களில் 36.66% பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஐந்தாண்டில், நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து 602 வெறுப்புக் குற்றங்களும், 345 வெறுப்புப் பேச்சு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக ‘அநீதி மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான ஐக்கிய அமைப்பு’ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட 602 குற்றச் சம்பவங்களில், 29 குறிப்பிட்ட சமூகத்தனர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், இதில் வெறும் 81 சம்பவங்களுக்கு (13%) மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட குற்றங்கள் (267) நேரடியாக வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவை என்றும், பெரும்பாலானவை பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நடந்துள்ளதாகவும், அதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 162 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட 602 வெறுப்புக் குற்றங்களில், 398 சம்பவங்கள் சிறுபான்மையினரை மிரட்டுதல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பானவையாகும். இதில் 214 சம்பவங்களில் அரசியல் கட்சிகள் அல்லது அதனுடன் இணைந்த அமைப்புகளுக்குத் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 173 சம்பவங்கள் உடல் ரீதியான தாக்குதல்கள் ஆகும். குறிப்பாக மதமாற்றம், கலப்புத் திருமணங்கள் மற்றும் அசைவ உணவுப் பழக்கம் போன்ற காரணங்களுக்காக ெபரும்பான்மையான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் (68), மகாராஷ்டிரா (60) ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் வகுப்புவாத பதற்றத்தின் புதிய மையங்களாக உருவெடுத்து வருவதாக அறிக்கை எச்சரிக்கிறது. வெறுப்புக் குற்றங்கள் மட்டுமல்லாமல், 345 வெறுப்புப் பேச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றில் 109 சம்பவங்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்டவை ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களையே போலீசார் துன்புறுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதோடு, மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கும் ஊறு விளைவிக்கும் என உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்குகளில், புகார் இல்லாவிட்டாலும் கூட, வெறுப்புப் பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அரசியல் தலைவர்களின் வெறுப்புப் பேச்சுக்களும், அரசின் மெத்தனப் போக்கும் குற்றவாளிகளுக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழலை உருவாக்கி, நாட்டில் பாகுபாட்டையும், பாதுகாப்பின்மையையும் வளர்ப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
The post மதமாற்றம், கலப்பு திருமணம், அசைவ உணவு போன்ற காரணங்களால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெறுப்பு குற்றங்கள் அதிகரிப்பு: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மோசமாகி உள்ளதாக அறிக்கை appeared first on Dinakaran.