மண்டல காலம் நாளை தொடங்குகிறது; சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு: நவம்பர் மாத ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

4 hours ago 3

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. கார்த்திகை 1ம் தேதியான நாளை முதல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 7 மணியளவில் சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி மற்றும் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கும்.

தந்திரிகள் கண்டரர் ராஜீவரர் மற்றும் பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடை திறப்பார். இன்று அதிகாலை 3.15 மணி முதல் இந்த மண்டல காலத்திற்கான நெய்யபிஷேகம் தொடங்கும். 41 நாள் மண்டலகாலம் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

இன்று மாலை தான் நடை திறக்கப்படும் என்றாலும் நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இன்று மதியத்திற்கு பின்னர் தான் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை தரிசனத்திற்கு தினசரி ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்து விட்டது.

உடனடி முன்பதிவுக்கு எருமேலி, பம்பை மற்றும் வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் வருகை அதிகரித்தால் தரிசன நேரம் அதிகரிக்கப்படும்
தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: சபரிமலையில் நாளை (16ம் தேதி) முதல் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனம் செய்யலாம். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தால் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும் . பிற்பகல் 2 மணிநேரம் மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தால் தரிசன நேரம் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

பம்பையில் இருந்தே பஸ் ஏறலாம்
கடந்த வருடம் வரை தமிழக அரசு விரைவு பஸ்களுக்கு பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வருடம் முதல் தமிழக அரசு விரைவு பஸ்களுக்கு பம்பையில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பம்பையில் இருந்தே இந்த பஸ்களில் ஏறிக்கொள்ளலாம்.

The post மண்டல காலம் நாளை தொடங்குகிறது; சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு: நவம்பர் மாத ஆன்லைன் முன்பதிவு முடிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article