மணிமுத்தாற்றில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

5 hours ago 2

 

விருத்தாசலம், மார்ச் 13: விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மாசி மகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருதாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சி 9ம் நாள் திருவிழாவான நேற்றுமுன்தினம் காலை தேரோட்டம் நடந்தது.

இதைதொடர்ந்து 10ம் நாளான நேற்று மாசி மகத்தை முன்னிட்டு, கோயிலின் அருகேயுள்ள புண்ணிய நதியான மணிமுத்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்ற ஐதீக முறைப்படி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக மணிமுத்தாற்றில் திரண்டனர்.

நேற்றுமுன்தினம் இரவே ஏராளமான மக்கள் விருத்தாசலத்திற்கு வந்து தங்கி நேற்று அதிகாலையில் இருந்தே திதி கொடுத்தனர். மாசி மகத்திற்கு திதி கொடுப்பதற்கு தேவையான அரிசி, காய்கறிகள், அகத்தி கீரை, கற்பூரம், வத்தி, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களும் ஆங்காங்கே தரை விரிப்புகள் போடப்பட்டு விற்பனை நடந்தது. அதனை வாங்கிய பக்தர்கள் மணிமுத்தாற்றில் இருந்த ஐயர், குருக்களிடம் கொடுத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான மக்கள் கூட்டம் விருத்தாசலத்தில் திரண்டதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று சுவாமியை தரிசனம் செய்தபின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் வழியாக வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பஞ்சமூர்த்திகள் ஐவரும் கோயிலை வலம் வந்து மணிமுத்தாற்றிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தீர்த்தவாரியுடன், மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். மணிமுத்தாற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது, 2 நாட்கள் பெய்த மழையால் வேப்பூர் அருகே நல்லூர் ஆற்றில் நேற்று தண்ணீர் வரத்து ஏற்பட்டு, அங்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்களை போலீசார் மீட்டனர். இதனால் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீக்கிரமாக ஆற்றை விட்டு போலீசார் வெளியேற்றினர்.

இதனால் மக்கள் கூட்டமாக காட்சியளித்த மணிமுத்தாறு சிறிது நேரத்தில் வெறிச்சோடியது. இதைத்தொடர்ந்து இன்று (13ம் தேதி) தெப்பல் உற்சவம் நடக்கிறது. நாளை (14ம் தேதி) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மாசி மக திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post மணிமுத்தாற்றில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article