இம்பால்: மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வௌியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு என்.பிரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி ரத்து செய்யப்பட்டு, தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பல இடங்களில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மணிப்பூரில் உள்ள மலை மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மணிப்பூர் கூடுதல் காவல்துறை தலைவர் லாஹாரி டோர்ஜி லஹாடூ கூறுகையில், “மணிப்பூரின் மலை மாவட்டங்களான தெங்னவுபால், காங்போக்பி, சண்டேல் மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மலை மாவட்டங்களின் பல இடங்களில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறையின் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் 4 மலை மாவட்டங்களில் காவல்துறை, அசாம் ரைபிள்ஸ் பிரிவினர், ராணுவம், மத்திய ஆயுதப்படை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அதிரடி சோதனைகளை நடத்தினர். அப்போது இந்த மலை மாவட்டங்களின் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும், 30 கண்ணி வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
The post மணிப்பூரில் 200 ஆயுதங்கள், 30 கண்ணிவெடிகள் பறிமுதல் appeared first on Dinakaran.