மணலி புதுநகர் பகுதியில் புதர்மண்டிய பேருந்து நிலையம்: சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள், வெயில், மழையில் பயணிகள் அவதி

1 day ago 1

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட மணலி புதுநகர் பிரதான சாலையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவியர் தொழிலாளர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் இங்கிருந்து மாநகர பேருந்துகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால் குண்டும் குழியுமாகவும், புதர் மண்டியும் காணப்படுகிறது.

இதனால் மாநகர பேருந்துகள், சகதியாக உள்ள பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாததால், பல மாதங்களாக இந்த பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இதற்கு பதிலாக மணலி புதுநகர் அய்யா கோயில் அருகே சாலையோரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. எனவே, இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த பேருந்து நிலைய இடம் சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் இருப்பதால், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதனை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அய்யா கோயில் அருகே சாலையோரம் மாநகர பேருந்துகளை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைத்து நவீன பேருந்து நிலையம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மணலி புதுநகர் பேருந்து நிலையம் புதர்மண்டி காணப்படுவதால், பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்கள், ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அய்யா கோயில் அருகே அனைத்து வசதிகளுடன் புதிய புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இதை செயல்படுத்தவில்லை. சாலை ஓரம் பேருந்துகள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மாநகர பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ துறை சார்ந்த அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து இங்கு நவீன பேருந்து நிலையத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* மினி பேருந்து சேவை
மணலி மண்டலம் 16வது வார்டுக்கு உட்பட்ட பர்மா நகர், சடையன் குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் மணலி புதுநகர் மற்றும் திருவொற்றியூருக்கு மாநகர பேருந்தில் பயணிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியது உள்ளது. இதனால் முதியோர், கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியர், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே மணலி புது நகரில் இருந்து சடையங்குப்பம், பர்மா நகர் வழியாக திருவொற்றியூர் வரை மினி பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* 5 ஏக்கர் நிலம்
மணலி புதுநகர் அய்யா கோயில் அருகில் சிஎம்டிஏவுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என்று மாதவரம் எஸ்சுதர்சனம் எம்எம்ஏ சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

The post மணலி புதுநகர் பகுதியில் புதர்மண்டிய பேருந்து நிலையம்: சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள், வெயில், மழையில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article