மணத்தக்காளி, முளைக்கீரை, அரைக்கீரை…நேரடி விற்பனை… நிறைவான வருமானம்!

3 days ago 4

என்னோட அப்பா ராமசாமி நெல், உளுந்து சாகுபடி செய்துக்கிட்டு இருந்தார். எவ்வளவு உழைத்தாலும் அதில் வருமானம் அதிகளவில் இருக்காது. இந்த நிலை இனி வரக்கூடாது, மாற்றுப்பயிர் சாகுபடி செய்யலாம் என்று சோதனை முயற்சியாக கீரை சாகுபடியில் இறங்கினேன். அதுபற்றிய விவரங்களை பல இடங்களுக்கு சென்று அறிந்தேன். குறிப்பாக இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வது பற்றி அறிந்தேன். அதையே நாமும் செய்யலாம் என முடிவெடுத்து செயல்படுத்தத் தொடங்கினேன்’’ என தான் இயற்கை முறை கீரை சாகுபடிக்கு வந்த கதையோடு பேச ஆரம்பித்தார் தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம். தனக்குச் சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கர் பரப்பில் மணத்தக்காளி கீரை, முளைக்கீரை மற்றும் அரைக்கீரையை சாகுபடி செய்து வரும் முருகானந்தம் மீதமுள்ள பகுதிகளில் நெல், மரவள்ளி, நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார். இந்தப் பயிர்களை சீசனுக்கு ஏற்றார்போல் சாகுபடி செய்தாலும் கீரையை மட்டும் ரெகுலராக பயிரிட்டு வருகிறார். தினசரி வருமானத்திற்கு கியாரன்டி என்பதால்தான் கீரையைத் தொடர்ச்சியாக பயிரிடுகிறார். அதை தினமும் அறுவடை செய்து வாரச்சந்தைகளுக்கு எடுத்துச் சென்று நேரடியாக விற்று நல்ல வருமானமும் பார்த்து விடுகிறார். இவரது கீரை சாகுபடி அனுபவத்தை அறிந்துகொள்ள ஒரு மதியப்பொழுதில் செல்லப்பன்பேட்டைக்கு சென்றோம். கீரைகளை அறுவடை செய்துகொண்டே நம்மிடம் தொடர்ந்து பேசினார்.

“ கீரை சாகுபடியில் நிலத்தை நன்றாக தயார் செய்வது முக்கியம். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். இதற்காக முதல் மூன்று முறை நன்கு வயலை உழுவேன். பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை விதைகளை சாகுபடி செய்வதற்கு முன்பாக மீண்டும் 2 முறை உழுது நன்கு மக்கிய தொழு உரத்தை கலந்துகொள்வேன். பின்னர் தரமான கீரை விதைகளைத் தூவுவேன். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழுஉரம்தான். நாங்கள் நான்கு நாட்டு மாடுகள் வளர்க்கிறோம். இவற்றின் சாணத்தை சேகரித்து எருவாக்கிக் கொள்வோம். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது அவசியம். எரு நன்கு மக்காமல் இருந்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது. மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது அதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு வடிகால் வசதியும் நன்றாக இருக்கும்.இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக்கொண்டு, அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணலைச் சேகரித்து சாகுபடி செய்யும்போது எருவுடன் கலந்து இடுவேன்.அப்போதுதான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரைச்செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியில் இயற்கை உரங்கள்தான் சிறந்தது. நம்மை நம்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் நலனுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும். இயற்கை முறையில் விளைந்த கீரைகளை சமைக்கும்போது வாசனை தூக்கலாக இருக்கும்.

இப்போது என் வயலில் முளைக்கீரை, அரைக்கீரையை அரை ஏக்கரிலும், மணத்தக்காளி கீரையை அரை ஏக்கரிலும் வைத்திருக்கிறேன். மணத்தக்காளி சாகுபடிக்கு நாற்றுகள் வாங்கி நடவு செய்வேன். முளைக்கீரை, அரைக்கீரை விதைகளை நேரடியாக விதைப்பேன். இந்தக் கீரைகள் விதைத்த 2ம் நாளிலேயே முளைக்க ஆரம்பித்து விடும். அதிக தண்ணீர் தேவை இருக்காது. 10ம் நாளில் கீரைகள் நன்கு வேர் பிடிக்க ஆரம்பித்துவிடும். அப்போது பூச்சித்தாக்குதல் ஏற்படாத வகையில் நாங்களே தயார் செய்து வைத்துள்ள பஞ்சகவ்யாவை தெளிப்பேன். 15ம் நாளில் இருந்து 20ம் நாளுக்குள் கீரைகள் நன்கு வளர்ந்து விடும். 21ம் நாளில் இருந்து கண்டிப்பாக அறுவடை செய்தே ஆக வேண்டும். சராசரியாக ஒரு நாளைக்கு அரைக்கீரை, முளைக்கீரைகள் 100 முதல் 120 கட்டுகள் வரை அறுவடை செய்கிறேன். மணத்தக்காளி கீரை சராசரியாக 50 கட்டுகள் கிடைக்கும். 3 கீரைகளும் சேர்த்து 170 கட்டுகள் வரை அறுவடை செய்வேன்.

மணத்தக்காளி கீரைகளுக்கு சிலசமயம் விதையும் தெளிப்பேன். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தைப் புழுதியாக உழவு செய்துகொள்ள வேண்டும். விதையைப் பரவலாகத் தூவி விட்டு, பாசனமிடுவோம். 7 நாட்களுக்குள் முளைப்பு தெரியும். தொடர்ந்து செடிகளை வாடவிடாமல் பாசனம் கொடுக்க வேண்டும். 15ம் நாள் தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்க வேண்டும். பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. 30ம் நாள் முதல் சுழற்சி முறையில் தினமும் அறுவடை செய்யலாம். செடியை வேரோடு பறிக்காமல், தரையில் இருந்து நான்கு விரல்கிடை அளவு விட்டுவிட்டு அறுக்க வேண்டும்.மதியம் 2 மணியளவில் கீரைகளை அறுவடை செய்ய ஆரம்பிப்பேன். என்னோட அப்பா, எனது மனைவி மகேஸ்வரி இருவரும் கீரை பறிக்கவும், சுத்தம் செய்யவும் உதவுவார்கள். மேலும் 3 தொழிலாளர்கள் கீரை பறிப்பார்கள். ஒரு மணி நேரத்தில் அனைத்து வகையான கீரைகளையும் பறித்து கட்டுகளாக கட்டி சுத்தம் செய்துவிடுவோம். இந்தக் கீரைக்கட்டுகளை வாரச்சந்தைகளில் நானே நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்கிறேன். பூதலூர், செங்கிப்பட்டி, மாதாக்கோட்டை, மருத்துவக்கல்லூரி சாலை சிந்தாமணி பகுதியில் நடக்கும் வாரச்சந்தைகளில் நேரடியாக சென்று விற்பனை செய்கிறேன். அனைத்து கீரைகளையும் கட்டு ரூ.20 என விற்பனை செய்கிறேன்.

ஒரு சில ஓட்டல்களுக்கும் கீரை கொடுக்கிறேன். வியாபாரிகள் முன்கூட்டியே கேட்டால் மட்டும் கூடுதலான அளவில் அறுவடை செய்வேன். வியாபாரிகளுக்கு ஒரு கட்டு கீரை ரூ.12க்கு கொடுக்கிறேன். மற்றபடி அனைத்து நாட்களிலும் கீரைகளை வாரச்சந்தையில்தான் விற்பனை செய்கிறேன். ரெகுலர் கஸ்டமர்கள் தேடி வந்து வாங்குகிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. செலவுகள் என்று பார்த்தால் 5 உழவுக்கு ரூ.2500, விதைகள், நாற்று, தொழுஉரம் ஆகியவற்றுக்கு ரூ.1000 என செலவு ரூ.3500 ஆகும். தினமும் 3 அல்லது 4 பேர் கீரை பறிக்கும் கூலி ரூ.400. தினசரி சராசரியாக 150 கட்டு கீரை ரூ.20 என்றால் ரூ.3000 கிடைக்கும். செலவுகள் போக ரூ.2000 தினசரி வருமானமாக கிடைக்கிறது. ஞாயிற்றுக் கிழமையைத் தவிர்த்து மாதத்தில் 25 நாட்கள் என்று வைத்துக் கொண்டால் ரூ.50 ஆயிரம் தாராளமாக வருமானம் பார்க்கலாம். மழைக்காலம் என்றால் வயலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது சற்று வருமானம் குறையும். எப்படிப் பார்த்தாலும் மாதத்திற்கு கீரையிலிருந்து மட்டும் ரூ.40 ஆயிரம் சம்பாதித்து விடுவேன்.

இது தினசரி வருமானம். நெல், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, உளுந்து, எள் என சீசனுக்கு சீசன் வருமானம் பார்க்கிறேன். சளைக்காமல் உழைத்தால் நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம். அன்றன்றே பறித்து விற்பனை செய்வதால் பலர் என்னைத் தேடி வந்து வாங்கி செல்கிறார்கள். வாரச்சந்தைகளுக்கு மாலையில் சென்றால் இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு திரும்புவேன். வரும்போது மனதுக்கு நிறைவாக இருக்கும்’’ என மகிழ்ச்சியுடன் கூறியபடி கீரைக்கட்டுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக பைக்கில் வைத்து கட்ட ஆரம்பித்தார்.
தொடர்புக்கு:
முருகானந்தம்: 96880 98537.

 

The post மணத்தக்காளி, முளைக்கீரை, அரைக்கீரை…நேரடி விற்பனை… நிறைவான வருமானம்! appeared first on Dinakaran.

Read Entire Article