![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38310319-untitled-6.webp)
சென்னை,
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து ஆவடியில் தி.மு.க. சார்பில் ஆவடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. மிகவும் வேதனையுடன் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். கண்டன கூட்டம் நடத்துகிறோம் என்பதைவிட நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒன்றும் இல்லை. மத்திய பட்ஜெட்டில் மக்களுக்காக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பெயருக்கு தான் வளர்ச்சியடைந்த பட்ஜெட்; ஆனால் அதில் ஒன்றும் இல்லை. மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பையும் ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. கல்விக்கு மொத்தமே 2.3 சதவீத நிதிதான் ஒதுக்கி இருக்கிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான நிதியும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் வளர்ச்சியில் பா.ஜ.க.வுக்கு எந்த அக்கறையும் இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டல் இல்லை; உரம், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றிற்கான மானியத்தை குறைத்துவிட்டனர். அனைவருக்குமான பட்ஜெட் என்று சொல்லிவிட்டு பீகாருக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஆந்திராவிற்கு திட்டங்கள் குவிந்த நிலையில் தற்போது பீகாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; மெட்ரோ, ரெயில்வே திட்டங்களுக்கு நிதி இல்லை. எதை கேட்டாலும் இல்லை, இல்லை என்றால் இதற்கு பெயர் பட்ஜெட்டா? ஆந்திரா, பீகாருக்கு திட்டங்கள் ஒதுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; எங்களுக்கும் தாருங்கள் என்றே சொல்லுகிறோம். கூட்டணி கட்சிகளின் தயவுடன்தான் பா.ஜ.க.வால் ஆட்சியமைக்க முடிந்தது. ஓட்டுகளை அறுவடை செய்வதையே நோக்கமாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தமிழ்நாடு இருக்கிறது. நீங்கள் நிதி கொடுக்காமல் இருக்கலாம்; நாங்கள் நீதியை அடையாமல் இருக்கமாட்டோம். எல்லா துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கும்.
2021 தேர்தலில் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை எனக்கு கொடுத்தனர். மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்த்து வருகிறோம். மூன்றரை ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நன்மை அளிக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
தமிழ்நாட்டின் உரிமையை காக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாடு முழுக்க தி.மு.க. கொடி கம்பீரமாக பறக்கிறது. உங்களின் ஆதரவால், உழைப்பால் உருவானதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.