சென்னை: திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று மக்கள் கொண்டாடுகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, திமுகவினருடன் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.
நவம்பர் 15ம் நாள் காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்னை சந்தித்தார். ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் டீன் ஷூஸ் என்ற தோல் அல்லாத காலணித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தைவான் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், தோல் அல்லாத காலணிகளைத் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனைச் செயல்வடிவமாக்கும் வகையில் நவம்பர் 15ம் நாள் ஜெயங்கொண்டத்தில் அடிக்கல் நாட்டிடச் சென்றேன்.தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு பெரியளவில் உயர்கல்வித் தகுதி அவசியமில்லை. பள்ளி இறுதித் தேர்வு முடித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை இந்தத் தொழிற்சாலைகள் வழங்கி வருகின்றன.
பணியாளர்களில் ஏறத்தாழ 80% பேர் பெண்கள்தான். உள்ளூரிலேயே 20 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தக் கூடியதாக இருக்கிறது. ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். “இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்”, “திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்” என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, “நிச்சயம் 200 ஜெயிப்போம்” என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.
அரியலூர் செல்லும் வழியில் வாரணவாசி என்ற ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்தேன். அரியலூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சற்று தாமதமாகிவிட்டது. நான் உரையாற்றியபோது, பல்வேறு திட்டங்களால் வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை மனதின் அடியாழத்திலிருந்து உணர்வுப்பூர்வமாகச் சொன்னேன்.
பெரம்பலூர் -அரியலூர் இரு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அரசுத் திட்டங்களின் நிலை குறித்தும், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். காலை உணவுத் திட்டம் போன்ற மக்களின் பெரும் வரவேற்புத் திட்டங்களின் செயல்பாடுகளை அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும் என்பதையும், சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கும் நேரம், குழந்தைகள் சாப்பிடும் நேரம் போன்ற சமயங்களில் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். திமுகவினர் கட்சிப் பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும் என வலியுறுத்தினேன்.
* விழுப்புரத்தில் முதல்வர் வரும் 28,29 தேதி ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில், ‘‘இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், திமுகவின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி: கள ஆய்வு குறித்து தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.